பக்கம் எண் :
 

 376                                   யாப்பருங்கல விருத்தி

     ‘தன்றளை பாதம் தனிச்சொற் சுரிதகம்
     என்றிவை நான்கும் அடுக்கிய தூங்கிசை
     வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே’.

 என்றார் காக்கைபாடினியார்.

     ‘தூங்கல் இசையாய்த் தனிச்சொற் சுரிதகம்
     தான்பெறும் அடிதளை தழீஇவரை வின்றாய்
     எஞ்சா வகையது வஞ்சிப் பாவே’.
     என்றார் அவிநயனார்.
     ‘தூங்கல் ஓசை நீங்கா தாகி
     நாற்சீர் நிரம்பா அடியிரண் டுடைத்தாய்
     மேற்சீர் ஓதிய ஐஞ்சீர் பெற்றுச்
     சுரிதகம் ஆசிரியம் உரியதனின் அடுத்து
     வந்த தாயின் வஞ்சிப் பாவே’.

 என்றார் நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர்.

[நேரிசை வெண்பா]

     ‘ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச்
     சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம்;- ஓரும்
     நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக்
     கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து’.

 எனவும்,

     ‘பன்னிய சீர்பயின்று பத்து நிலத்தவாய்
     மன்னவனைச் சேர்ந்து வனப்பெய்தி - மன்னுதலால்,
     நான்காம்பா என்றுரைக்கும் நாமநூல் வஞ்சியை
     நான்காம் குலமென்றார் நன்கு’.

 எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

     இருசீர் அடி வஞ்சிக்கு ஒன்பது நிலத்தோடு முச்சீர் அடி வஞ்சி சிறப்பின்மையால், ஒரு நிலமேயாகக் கொண்டு, வஞ்சி எல்லாமாய்ப் பத்து நிலம் என்ப தொல்காப்பியனார் முதலாகிய தொல்லாசிரியர். அதுவே இந்நூலுள்ளும் துணிபு.

 நான்காம் குலத்திற்குப் பத்து நிலமாவன:

     ‘ஆணைவழி நிற்றல், மாண்வினை தொடங்கல்
     கைக்கடன் ஆற்றல், கசிவகத் துண்மை,