[குறள் வெண்பா]
‘நேர்நேராம் நேரசையும் நேர்பும்; நிரைநேராய்
ஏனை இரண்டும் எனல்’.
இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.
‘தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா’.1
என்றும்; ‘போதுபூ, போரேறு, பூமருது’ இவைகளைப் பாதிரி யாகவும்,
‘விறகுதீ, கடியாறு, மழகளிறு’ இவைகளைக் கணவிரியாகவும், வெண்சீரின்
ஈற்றசை நிரைபசையாகவும் இயற்றித் தொல்காப்பியனாரும் நற்றத்தனாரும்
முதலாகிய ஆசிரியர் சொன்ன மதமெல்லாம்
வல்லார்வாய்க் கேட்டுக் கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும். ஒழிந்தன எல்லாம் இந்நூலோடு ஒக்கும்.
[குறள் வெண்பா]
‘போதுபூப் போரேறு பூமருதென் றிம்மூன்றும்
பாதிரியா வைக்கப் படும்’.
எனவும்,
‘ஏனைய மூன்றும் கணவிரியாம் வெண்சீரின்
ஈறு நிரையாம் எனல்’.
எனவும் இவற்றைப் பதம் நெகிழ்ந்து உரைத்துக் கொள்க.
இனி, ஒருசாரார் சொல்லும் கடாவும் விடையும்
[நேரிசை வெண்பா]
‘குற்றுகரம் ஒற்றாகக் கொள்ளாதே வெள்ளையான்
மற்றும் தளைவிரவும் மற்றதனால் - குற்றுகரம்
ஐந்தா றசைச்சீர் அருகிவரும் வஞ்சிக்கண்
என்றாற்றான் என்னாம் இழுக்கு?’
இது கடா.
‘அறுத்திசைக்கும் செய்யுட்பால் அன்றுள்ளான் றன்பேர்
செறிப்பிற் செயிர்வாக்காம் என்னும் - குறிப்பினாற்
கேடுரைத்தார் கெட்டவரோ பற்றார்க்கும் கேடல்லர்
நாடறியும் என்பதனால் நன்கு’.
இது விடை.
1 தொல். பொ. 367
|