என்னை?
[குறள் வெண்பா]
‘ஓரெழுத்தும் ஈரெழுத்தும் மூவெழுதது மாவழங்கா
ஆசிரியத் துள்ளசைச்சீர் ஆம்’.
என்பவாகலின்.
அவற்றுள், நேர் அசையும் நேர்பு அசையும் ஓரெழுத்தாய வழி,
நான்கெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்ந்த ஒரோ
ஒன்றிற்குப் பன்னிரண்டு அடியாக, இரண்டிற்குமாய் இருபத்து நான்காம்.
என்னை?
[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
‘நேரசையும் நேர்பசையும் ஓரெழுத் தாயவழி
நான்கெழுத் தாதி பதினைந்து காறுயரத்
தோன்றுமால் நாலா றடி’.
என்பவாகலின்.
அவ்விரண்டையும் ‘தேமா’ என்னும் சீரேயாகுதலால், இரண்டுமாய் அலகு நிலையாற் பன்னிரண்டேயாகக் கொள்ளப்படும்.
என்னை?
[குறள் வெண்பா]
‘இருபன் னிரண்டென்பர் ஏனையார்; ஈண்டை
ஒருபன் னிரண்டே துணிவு’.
என்பவாகலின் இனி, நேர்பு அசை இரண்டெழுத்தாகக் கொள்ளுமிடத்து
ஐந்தெழுத் தடி முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயரப் பன்னிரண்டு
அடியாம்.
என்னை?
[குறள் வெண்பா]
‘நேர்பீ ரெழுத்தாங்கால் ஐந்தாதி ஈரெட்டுச்
சேர அடிபன் னிரண்டு’.
என்பவாகலின்.
|