என்னை?
[குறள் வெண்பா]
‘ஆசிரி யத்துள் அசைச்சீர் அடித்தொகை
நாட்டினர் ஐம்பது நான்கு’.
என்பவாகலின்.
இவை ஐம்பதும், மேற்சொன்ன இருநூற்று ஒருபத்தோரடியும்
தலைப்பெய்து எண்ண, ஆசிரிய அடித் தொகை இருநூற்று
அறுபத்தொன்றாம்.
என்னை?
[குறள் வெண்பா]
‘அரில்தீர் அகவற் கடித்தொகை ஆய்ந்தார்
இருநூற் றறுபத்தொன் றென்று’.
என்பவாகலின்.
இனி, வஞ்சிப்பாக் குறளடி மூன்றும், சிந்தடி மூன்றும், அளவடியுள் முதல் மூன்றும் பெற்ற ஒன்பது நிலமும், முச்சீர்க் கட்டளையாற் பெற்ற
முச்சீரடியுமாய் வஞ்சி பத்து நிலமும் பெற, அவையும் ஆசிரிய அடியுள்ளே
அடங்கும் என்பது.
என்னை?
[குறள் வெண்பா]
‘ஆசிரியம் பெற்ற அடிநிலமே வஞ்சிக்கும்
ஆகுமாஞ் சீராற் குறைத்து’.
என்பவாகலின்.
வெண்பாவிற்கு உரிய இருநூற்று முப்பத்திரண்டு அடியும் ஆமாறு
சொல்லுமிடத்து, இயற்சீர் பத்தும் தன்சீர் நான்குமாய், வெண்பாவிற்குப்
பதினான்கு சீருமாம்.
என்னை?
[குறள் வெண்பா]
‘வெள்ளைக் கியற்சீர் பத்துந்தன் சீரொரு
நான்குமாக் கொள்வர் குறித்து’.
என்பவாகலின்.
|