பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           493

    அவை நான்கு நிலைமையவாம்; இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச் சீரும், நான்கெழுத்துச் சீரும், ஐந்தெழுத்துச் சீரும் என.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘இரண்டெழுத்தும் மூன்றெழுத்தும் நான்கெழுத்தும் ஐந்தும்
     திரண்டே எழுத்துச்சீர் ஆம்’.

 என்பவாகலின்.

    வெண்பாவிற்குச் சொல்லப்பட்ட பதினான்கு சீருள்ளும் தேமாவும், பாதிரியும், போதுபூவும், போரேறும் என்னும் நான்கு சீரும் ஈரெழுத்துச் சீராம்.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘தேமாவே பாதிரி போதுபூப் போரேறென்
     றாகுமாம் ஈரெழுத்துச் சீர்’.

 என்பவாகலின்.

    அவற்றுள், ‘தேமா’ எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடி காறும் உயர்ந்த ஒன்பதடியும் பெற்ற ஒன்பதேயாம்.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘தேமாவெட் டாதி பதினா றுயர்த்தெண்ண
     ஆமாகும் ஒன்ப தடி’.

 என்பவாகலின்.

    ஒழிந்த பாதிரியும், போதுபூவும், போரேறும் என்றிவை மூன்றும் ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்ந்த ஒரோ ஒன்று  ஒன்பதாக, இருபத்தேழடியாம்.

    என்னை?