|
உறுப்பியல் - சீர் ஓத்து 63 |
12) உரிச்சீரின் திறமும் தொகையும்
மூவசைச் சீர்உரிச் சீர்இரு நான்கனுள்
நேரிறு நான்கும் வெள்ளை; அல்லன
பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே.
‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், ‘உரிச்சீர்’ ஆமாறும், அவற்றது
எண்ணும், பெயர் வேறுபாடும் உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள் : மூவசைச்சீர் உரிச்சீர் இரு நான்கனுள் - மூன்று
அசையான் ஆகிய சீர் உரிச்சீர்; அஃது எட்டு வகைப்படும்; அவற்றுள், நேர்
இறு நான்கும் வெள்ளை - நேரசை இறுதியாகிய நான்கும் வெண்பா
உரிச்சீர்; அல்லன பாவினுள் வஞ்சியின் பாற்பட்டனவே - அவை அல்லன
வாகிய நிரையசை இறுதியாகிய நான்கும் பாவகையுள் வஞ்சிப்பாவின் பகுதி
யாகிய ‘வஞ்சி உரிச்சீர்’ எனப்படும் (என்றவாறு.)
‘பாவினுள் வஞ்சியின் பாற்பட்டனவே’, என்ற சிறப்பால், வஞ்சி உரிச்சீர்
பிற செய்யுளுள் வரினும், வஞ்சிப் பாவினுட்போல இனிது நடவா என்க.
வெண்பா உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு:
‘தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்.’
எனக் கொள்க. இனி,
‘பூவாமா, விரிபூமா, நறுவடிமா, பூவிரிமா.’
எனவும்,
‘பொன்னாக்கும், பொருளாக்கும், பொருள் பெருக்கும்,
பொன்பெருக்கும்.’
எனவும்,
‘தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.’
எனவும்,
‘வேய்மென்றோள், வளைமென்றோள், வளைகெழுதோள்,
வேய்கெழுதோள்.’
எனவும் வரும்.பிறவும்அன்ன
|