வி-ரை: வேற்றுப் பொருள் வைப்பணியோடு விலக்கு அணி கூடிவரின் , அது வேற்றுப்பொருள்வைப்பு விலக்காம். வேற்றுப்பொருள் வைப்பணியின் இலக்கணத்தை அடுத்த நூற்பாவால் அறிக.
அனபாயன் குடைக்கீழ் அடங்காத வேந்தில்லை என விலக்கலின் விலக்கணி யாயிற்று . இதனைப் பின்னிரண்டு அடிகளில் உலகறி பொருளான வேற்றுப் பொருளில் வைத்து விளக்கி யிருத்தலில் , வேற்றுப் பொருள் வைப்புமாயிற்று.
2. சிலேடை விலக்கு
எ-டு: 'அம்போ ருகஞ்செற் றமுத மயமாகி
வம்பார் முறுவல் ஒளிவளர்க்க - இம்பர்
முகைமதுவார் கோதை முகமுண் டுலகின்
மிகைமதியும் வேண்டுமோ வேறு'
இ-ள்: தாமரையினது அழகை யழித்து , அமிருதத் தன்மைத்தாய்ப் புதுமையோடு கூடி விரியாநின்ற ஒளியையுடைத்தாதற்கு , முல்லை முகைகளையுடைய கோதையை யுடையாளுடைய முகமல்லது , தாமரையைக் கருகுவித்து அமிருத கலைகளால் இயன்ற வடிவுடைத்தாய்ச் செவ்வி தாராநின்ற ஒளிநிலா விரிமதி உலகத்திற்கு மிகை எ- று.
இது முகத்திற்கும் மதிக்கும் சிலேடை . முறுவல் - ஒளி , வம்பு - புதுமை , இம்பர் - இவ்விடம்.
வி-ரை:சிலேடை யணியோடு விலக்கு அணி கூடிவரின் , அது சிலேடை விலக்காம்.
இதன்கண் முகமிருக்க மதியமும் வேண்டுமோ ? என மதியத்தை விலக்கலின் , இது விலக்கணி யாயிற்று . முன்னிரண்டு அடிகள் முகத்திற்கும் மதியத்திற்கும் ஒப்பப் பொருள்படுதலின் சிலேடையு மாயிற்று.
3. ஏது விலக்கு
எ-டு: 'பூதலத்துள் எல்லாப் பொருளும் வறியராய்க்
காதலித்தார் தாமே கவர்தலால் -நீதி
அடுத்துயர்ந்த சீர்த்தி அனபாயா ! யார்க்கும்
கொடுத்தியெனக் கொள்கின் றிலேம் '
இ-ள்: பூமண்டலத்துள்ளே வறிஞராய் ஆசைப்பட்டார் யாவரும் , தாம் ஆசைப்பட்ட பொருள்களைத் தடையின்றித் தாமே எடுத்துக் கொள்ளுகின்றார் ஆதலால் , நீ உலகத்து வறியோர்க்குக் கொடுக்கின்றாயாக நினைக்கின்றிலோம் ; நீதியைச் செய்தலாலே உயர்ந்த கீர்த்தியையுடைய அனபாயனே எ-று.
'நீதி அடுத்துயர்ந்த சீர்த்தி ' என்றது பிள்ளையைத் தேர்க்காலில் இட்ட குணம் என்றவாறு.
வி-ரை:ஏதுவணியோடு விலக்கணி கூடிவரின் அது ஏது விலக்காம்.