பூதலத்தில் எல்லாப் பொருளையும் வறியராயுள்ளார் அனைவரும் தாமே கவர்தல் என்னும் ஏதுவால் , யார்க்கும் கொடுத்தல் என்பது விலக்கப் பட்டிருத்தலின் , இது ஏது விலக்காயிற்று.
காரண விலக்கிற்கும் (பக்.92) இதற்கும் உள்ள வேற்றுமை :- முன்னையது காரணத்தை விலக்குவது; இது காரணத்தால் விலக்குவது. (19)
7. வேற்றுப்பொருள் வைப்பணி
46. முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப்
பின்னொரு பொருளை யுலகறி பெற்றி
ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே.
எ-ன், நிறுத்தமுறையானே வேற்றுப்பொருள் வைப்பு என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: முன் ஒரு பொருள்திறந் தொடங்கிப் பின்னர் அது முடித்தற்கு வலியுடைய பிறிதொரு பொருளை உலகறி பெற்றியான் வைத்து மொழிவது வேற்றுப்பொருள் வைப்பென்னும் அலங்காரமாம் எ-று.
இதன் அகலம் உரையிற் கொள்க.
வி-ரை:கவிஞன் தான் சொல்லக் கருதிய பொருளை முடித்தற்கு உலகறிந்த பொருளாய வேறொரு பொருளை வைப்பது வேற்றுப் பொருள் வைப்பாம். கவிஞன் தான் கருதிய பொருளை , வேற்றுப் பொருளாகக் கூறும் பொருள் உறுதிப்படுத்துவதாக இருக்கும் . கவிஞன் தான் சொல்லக் கருதிய பொருளைச் சிறப்புப்பொருள் என்றும் , அதனை முடித்தற்குக் கூறப்படும் வேற்றுப்பொருளைப் பொதுப்பொருள் என்றும் கூறுவர் . முடித்தல் - உறுதிப்படுத்தல்.
அதன் வகை
47 . முழுவதுஞ் சேறல் ஒருவழிச் சேறல்
முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல்
கூடா வியற்கை கூடு மியற்கை
இருமை யியற்கை விபரீதப் படுத்தலென்(று)
இன்னவை எட்டும் அதன(து) இயல்பே.
எ-ன் , இது அவ்வலங்காரத்தை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: முழுவதுஞ் சேறுலும் , ஒருவழிச் சேறலும் , முரணித் தோன்றலும் , சிலேடையின் முடித்தலும் , கூடாவியற்கையும் , கூடுமியற்கையும் , இருமையியற்கையும் , விபரீதப்படுத்தலும் என எண் வகையான் வருவது அவ்வலங்காரத்து இயல்பு எ-று.
அவற்றுள் , (1) முழுவதுஞ்சேறல் என்பது ஒருதிறம் உரைத்தால் அத்திறம் எல்லாவற்றின் மேலும் முற்றச் செல்ல வுரைப்பது.