பக்கம் எண் :
 
102தண்டியலங்காரம்

எ-டு : ' புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச்
சிறந்த வொளிவளர்க்குந் தேரோன்-மறைந்தான்
புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார் ? '

இ-ள்: உலகைக் காத்துப் பொலிவுடைய சக்கரத்தை நடத்தி இருள்கெட , மிக்க ஒளியை வளர்க்குந் தேரையுடைய ஆதித்தன் மறைந்தான் ; கடல் சூழ்ந்த உலகிற் பிறந்தார் இறவாதே வாழ்கின்றார் யாவர்? எ-று.

வி-ரை: இதன்கண் 'இருளை நீக்கி ஒளி வளர்ந்த கதிரவன் மறைந்தான் ' என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும் . இதனை முடித்தற்கு 'உலகில் தோன்றியவர்களில் யார்தாம் இறவாதவர் ' என்ற உலகறிந்த பொருளை ஏற்றியுரைத்தலின் , இது வேற்றுப் பொருள் வைப்பாயிற்று .தோன்றிய பொருள் யாவும் மறையும் என்பது உலகப் பொருள்கள் அனைத்திற்கும் பொருந்துதலின் , இது முழுவதும் சேறல் என்னும் வகையாயிற்று . 'தோற்றம் உண்டேல் மரணம் உண்டு ' என்ற சுந்தரர் தேவாரமும் காண்க.

(2) ஒருவழிச்சேறல் என்பது ஒருதிறம் உரைத்தல் அத்திறம் எல்லாவற்றின் மேலும் முற்றச் செல்லாது , சிலவற்றின் மேலே சென்றொழிவது.

எ-டு: 'எண்ணும் பயன்தூக்கா தியார்க்கும் வரையாது
மண்ணுலகில் வாம னருள்வளர்க்கும் - 1தண்ணறுந்தேன்
பூத்தளிக்கும் தாராய் ! புகழாளர்க் கெவ்வுயிரும்
காத்தளிக்கை யன்றோ கடன் '

தூக்கல்-விசாரித்தல். வாமன்-திருமால். கடன்-முறைமை.

வி-ரை: , இ- ள் : திருமால் தனக்கென யாதும் பயன் கருதாது உலகில் யாவர்க்கும் இல்லையென்னாது கருணையைச் செய்தருளுகின்றான் ; குளிர்ந்த நல்ல தேனை மலர்ந்து கொடுக்கும்படியான மாலையை யுடையவனே ! புகழுடையார்க்கு எவ்வுயிர்களையும் காத்தளித்தலன்றோ கடமையாகும் என்பதாம்.

இதன்கண் 'திருமால் யாவர்க்கும் கைம்மாறு கருதாது அருள் சுரக்கின்றான் ' என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும் . இதனை முடித்தற்குப் ' புகழ் பொருந்தியார்க்கு எவ்வுயிரும் காத்தளித்தலே கடன் ' என்ற உலகறி பொருளை ஏற்றியுரைத்தலின் வேற்றுப் பொருள் வைப்பாயிற்று . எவ்வுயிரையும் காத்தளித்தல் உலகினர் அனைவர்க்கும் பொருந்தாது , அவர்களுள் ஒரு சாரார் ஆகிய புகழாளர்க்கே அமைதலின் , இது ஒருவழிச்சேறலாயிற்று.

(3) முரணித்தோன்றல் என்பது தம்முள் மாறுபட்டிருக்கும் இயல்புடைத்தாய பொருள் வைப்பது.

எ-டு : 'வெய்ய குரல்தோன்றி வெஞ்சினவே றுட்கொளினும்
பெய்யு முகில்தன்னைப் பேணுவரால் -வையத்
திருள்பொழியுங் குற்றம் பலவரினும் யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ் '


1. 'மின்னறுந்தேன் ' என்பதும் பாடம்.