பக்கம் எண் :
 
பொருளணியியல்107

1. ஒருபொருள் வேற்றுமைச்சமம்

எ-டு: 'அனைத்துலகுஞ் சூழ்போய் அரும்பொருள் கைக்கொண்(டு)
இனைத்தளவைத் தென்றற் கரிதாம் - பனிக்கடல்
மன்னவநின் சேனைபோல் மற்றது நீர்வடிவிற்(று)
என்னும் இதுவொன்றே வேறு.

இ-ள்: முழுதுலகுஞ் சூழ்ந்து பிறர்க்கு அரிய பொருள்களையும் உடைத்தாய் இன்ன அளவினையுடைத்து என்றற்கு அரிதாகும் குளிர்ந்த கடலும், எல்லாநாட்டையும் கைக்கொண்டு அவ்வந் நாட்டரசரது அரிய நிதிய மெல்லாம் கைக்கொண்டு எண்ணற்கு அரிய நினது சேனையும்,மன்னவனே! ஒக்குமாயினும், கடலானது நீராகிய வடிவை உடையதென்னும் ஒரு குணமே வேறுபட்டிருக்கும் எ-று.

வி-ரை:கூறப்படும் இருபொருள்களுள் ஒன்றற்கு மட்டுமே வேற்றுமை கூறி, அவ்வேற்றுமை யிருப்பினும் அவ்விரண்டு பொருள்களும் சமமேஎன்று கூறுவது ஒரு பொருள் வேற்றுமைச் சமமாம்.

இப்பாடற்கண் கூறப்படும் பொருள்கள் சேனை, கடல் ஆகிய இரண்டாம், முன்னிரண்டடிகளில் இவ்விரண்டிற்குமுள்ள ஒப்புமையைக் கூறி, மூன்றாமடியில் 'நீர் வடிவிற்று என்னும் இதுவொன்றே வேறு எனக் கடலுக்கு மட்டும் வேற்றுமை கூறி, அவ்வேற்றுமை யிருப்பினும் அவ்விரண்டும் சம்மே எனத்தோன்றுமாறு கூறியிருத்தலின், இது ஒரு பொருள் வேற்றுமைச் சமமாயிற்று.

2. இருபொருள் வேற்றுமைச்சமம்

எ-டு: சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று
மலரிவருங் கூந்தலார் மாதர்நோக்(கு) ஒன்று
மலரிவருங் கூத்தன்தன் வாக்கு'

இ-ள்: உலாவிச் செவியை அளக்கும் செம்மையை உடைத்தாய், மனங்களில் நின்ற மாத்திரத்திலே உவகையை நிறைக்கும் தன்மையை உடையது மலர் செறியுங் கூந்தலை உடையாருடைய காதலைச் செய்யும் கண் என்றும்; உலகத்தார் செவியால் அளந்தறியும் தன்மையை உடைத்தாய்க் கேட்போர். மனங்களை விடாதே நின்று அளவில்லா இன்பத்தைத் தோற்று விப்பது மலரி எனப்பட்ட ஊரில் உண்டாகிய கூத்தன் என்னும் இயற் பெயரையும், சக்கரவர்த்தி என்னும் சிறப்புப் பெயரையும் உடையானது கவி என்றும் வந்தவாறு.

இதனுள் ஒன்று கண்ணாகவும், மற்றொன்று கவியாகவும் நின்றவாறு கண்டுகொள்க. மலரி என்பது ஒர் ஊர்.

வி-ரை:கூறப்படும் இருபொருட்கும் வேற்றுமை கூறி, அவ்வேற்றுமை உடையவேனும், இரண்டும் சமமே என்று கூறுவது இருபொருள் வேற்றுமைச் சமமாம்.