பிரமன் தலை இழந்த வரலாறு: பிரமனும் சிவபொருமானைப் போன்றே ஐம்முகம் உடையனாய் இருந்தனன் என்றும், உமையம்மையாருக்கு ஐயம் ஏற்படாதிருக்கச் சிவபெருமான் பிரமனுக்குள்ள ஐம்முகத்துள் ஒன்றைக் கொய்தனர் என்றும் கூறுப.
பிதாவைக் கொலை புரிந்த வரலாறு: திருச்சேய்ஞலூரில் உள்ள எச்சதத்தன் என்பாருக்குப் பவித்திரையினிடமாகத் தோன்றிய அந்தணர் குலச் சிறுவர் விசாரசருமர் என்பார். இவர் அலகின் கலையின் பொருட் கெல்லை ஆடுங்கழலே எனத் தெளிந்த உள்ளத்தவர். அவ்வூரில் ஆனிரைகளை மேய்க்கும் இடையன் ஒருவன் ஒருநாள் ஓராவினைப் பரிவின்றி யடித்துவிட, அதுகண்ட விசாரசருமர் அவனை நீக்கித் தாமே அவ்வானிரைகளை மண்ணியாற்றங்கரையில் மேய்ப்பாராயினர். அங்ஙனம் மேய்க்குங்கால் நாளும் அவ்வாற்றைங்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து,ஆவின் பாலைக்கொண்டு திருமஞ்சனமாட்டி வழிபடுவாராயினர். இதனைக்கண்ட, ஒருவன், ஆனிரைகளுக்குரியாரிடத்து இச்செய்தியைக் கூற, அவர்களனை வரும் எச்சதத்தனிடம் இதனைக் கூற, அவரும் அதனை நேரில் காண அவ் வாற்றங்கரைக்கண் மறைந்திருப்பாராயினர். வழக்கம்போல விசாரசருமர் மணலால் இலிங்கம் அமைத்து, ஆவின்பாலைக் கறந்து திருமஞ்சனமாட்ட, அதனை மறைவில் கண்டுகொண்டிருந்த தந்தையார் காலால் அவ்விலிங்கத்தை யிடறச் சிவபோகப் பெருவாழ்வில் திளைத்துக்கொண்டிருந்த விசாரசருமர் ஆங்கிருந்த கோலைக்கொண்டு தடிய, அதுவே மழுவாக, தந்தை யாரின், இருதாளையும் துணித்தது , இறைவன் நம்பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்; இனி உனக்கு அடுத்த தாதை நாமே என்று அருள் செய்து, அனைத்து நாம் உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்று அங்கு அவர் பொன்தட முடிக்குத் தம்சடையிலுள்ள கொன்றை மாலையை வாங்கிச் சூட்டினார் என்பது வரலாறு. இதனால் விசாரசருமர் சண்டீசர் என்ற பெயரைப் பெற்றார். இது பெரியபுராணத்துட் கண்டது.
வேற்றுப்பொருள் வைப்பணியில் கூறப்பட்ட ஒருவழிச் சேறல் முதலிய வகைகளின் இலக்கணம், கவிஞன் தான் சொல்லக் கருதிய பொருளிலோ, அல்லது அதனை முடித்தற்கு வந்த பொருளிலோ, அல்லது அவ்விரண்டிலுமோ அமையலாம் என்பதை மேற்காட்டிய பாடல்களால் அறியமுடிகின்றது .
8 வேற்றுமையணி
48. கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை யிருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே.
எ-ன், நிறுத்தமுறையானே வேற்றுமை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: கூற்றினானாதல், குறிப்பினானாதல் ஒப்புடைய இரு பொருளை ஒரு பொருளாக வைத்து அவற்றைத் தம்முள் வேற்றுமைப்படச் சொல்லுவது வேற்றுமை என்னும் அலங்காரமாம் எ-று.
வேற்றுமை' என்னாது ' அதுவே ' என்ற மிகையால், அவை ஒரு பொருளான் வேற்றுமை செய்தலும், இப்பொருளான் வேற்றுமை செய்தலும் உடையன. அல்லதூஉம், அவ்விலேசானே வேற்றுமைப்படக் கூறுதலேயன்றி ஒன்றின் ஒன்று மிகுதிப்படக் கூறவும் படும்.