பக்கம் எண் :
 
பொருளணியியல்105

எ-டு: 'கோவலர்வாய் வேய்ங்குழலே யன்றிக் குரைடகலும்
கூவித் தமியோரைக் கொல்லுமால் - பாவாய்!
பெரியோரும் பேணாது 1செய்வரே போலும்
சிறியோர் பிறர்க்கியற்றுந் தீங்கு'

இ-ள்: இடைக்குல மாக்கள் வாயின் வேய்ங்குழல் இசையே யன்றி, ஒலிக்குங் கடலும் கதறிப் பிரிந்திருந்தாரைக் கொல்லும்; பாவாய்! பெருந்தகைமை உடையாரும் விசாரியாது செய்வர் போன்றதுகாண், எப்பொழுதுஞ் சிறியோர் அயலவர்க்குச் செய்யுந் தீமைக் காரியத்தை எ-று.

பெரியோர் - கடல். சிறியோர் - குழல். தீங்கு - தீமை. ஆல்- அசை

வி-ரை: இதன்கண் 'பிரிவால் வருந்தியிருப்பவர்களை அவர்கள் வருத்தம் மிகுமாறு கோவலரின் வேய்ங்குழலே யன்றிக் கடலும் அத்தன்மையைச் செய்கிறது', என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும். இதனை முடித்தற்குச் ' சிறியோர் செய்யும் தீங்கினைப் பெரியோர்களும் செய்வர் போலும்', என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின், இது வேற்றுப் பொருள் வைப்பாயிற்று. சிறியோர் பிறர்க்குத் தீங்கியற்றல் கூடும்தன்மை. பெரியோர் அங்ஙனம் செய்தல் கூடாத் தன்மை. சிறுமையதாகிய குழல் செய்யும் தீங்கினைப், பெரிதாகிய கடலும் செய்கிறது எனவே, அவ்விருமை (கூடுமியற்கை, கூடா இயற்கை) இயற்கையும் ஒருங்கு கூறியதாயிற்று.

கொல்லுதல் - துன்பத்தை மிகுவித்தல் அஃது அன்னதாதல் `தன்னையே கொல்லும் சினம்' (குறள் -305) 'கொல்லச் சுரப்பதாங் கீழ் (நாலடி-279)என்பவற்றால் அறிக.

(அ) விபரீதம் என்பது விபரீதப்படச் சொல்லுவது.

எ-டு: 'தலையிழந்தான் எவ்வுயிருந் தந்தான் பிதாவைக்
கொலைபுரிந்தான் குற்றங் 2கடிந்தான் - உலகில்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம்
வினையும் விபரீத மாம்.

இ-ள்: முழுதுலகும் படைத்த பிரமன் தலை இழந்தான்; பிதாவைக்கொன்ற சண்டீசன் குற்றம் தீர்ந்தான்; ஒருவர்க்கு மில்லாத பெருமையுடையராய் உயர்ந்தோர் நினைப்பின் தப்பாத வினைகளும் உலகத்து மறுதலைப்படும் எ-று.

இதனுள் நல்வினைப்பயன் தீதாகவும், தீவினைப்பயன் நன்மையாகவும் வந்து விபரீ தமானது காண்க.

வி-ரை:இதன்கண் தலையிழந்த பிரமன் எவ்வுயிரையும் தந்தான் எனபதும், பிதாவைக் கொலைபுரிந்த சண்டீசரைக் குற்றமற்றவராக இறைவன் ஆட்கொண்டான் என்பதும் கவிஞன் கூறக்கருதியவிபரீதப் பொருளாகும். இதனை முடித்தற்கு 'உலகில் தனித்தலைமை பூண்டவர்கள் தவறுகள் செய்யினும் தவறாகா' என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின் இது வேற்றுப் பொருள் வைப்பாயிற்று.


1. 'செய்வாரே' என்பதும் பாடம்.

2. 'தீர்ந்தான்' என்பதும் பாடம்.