இ-ள்: அவ்வேற்றுமை என்னும் அலங்காரம் குணத்தோடும் , பொருளோடும் , சாதியோடும் , தொழிலோடும் கூடியும் வரும் எ-று .
அவற்றுள் ,
1. குண வேற்றுமை
எ-டு : ' சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமானாம்
கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழ்ஒவ்வார் - பொற்றொடியாய்
ஆழி யுடையான் மகன்மாயன் செய்யனே
கோழி யுடையான் மகன் '
இ-ள்: காமனும் , சோழனும் தம்மில் நிறம் ஒவ்வார் . பொன்னாற் செய்த வளையலை உடையவளே ! சக்கரத்தை யுடையனாகிய மாயனுடைய மகனாகிய காமன் கறுத்திருப்பான் ; கோழி என்னும் ஊரை யுடையவனாகிய சோழனுடைய மகன் சிவந்திருப்பான் எ-று .
கோழி - உறையூர் . மால்மகன் - காமன். கேழ் - ஒளி .
வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள்கள் காமனும் சோழனும் ஆம் . இவ்விருவருக்கும் கறுப்பும் சிவப்புமாகிய வேற்றுமை கூறப்பட்டிருத்தலின் , இது குண வேற்றுமை ஆயிற்று . மாயன் - கறுப்பு நிறத்தை யுடையவன் .
2. பொருள் வேற்றுமை
எ-டு : ' ஒங்கல் இடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் '
இ-ள்: உதய மலையில் தோன்றி , மேன்மக்கள் தொழுதேத்த விளங்கி , இரைந்தொலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்து இருள் அகற்றுவதாயும் ; பொதிய மலையில் தோன்றி , அறிவுடையோர் தொழுதேத்த விளங்கி , இரைந்தொலிக்கும் கடல்சூழ் உலகத்தில் மக்கள் உள்ளத்து உள்ள மயக்கந் தீர்ப்பதாயும் இருக்கின்றவற்றுள் , ஒன்று ஒளியும் அழகும் தனிக்கால் தேரும் விரும்பும் வெயிலும் உடைய ஆதித்தன் ; ஏனையது தனக்கொப்பற்ற தமிழ் எ-று .
ஆழி - தேர்க்கால் . நேர் - ஒப்பு .
வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள்கள் தமிழ் , கதிரவன் ஆகிய இரண்டாம் . இவ்விரு பொருள்களும் ஓங்கலிடை வருதல் முதலிய தொழில்களால் ஒப்புமையுடையவேனும் , பொருளால் இரண்டும் வெவ்வேறு என வேற்றுமை கூறியிருத்தலின் , இது பொருள் வேற்றுமை ஆயிற்று .
இருபொருள் வேற்றுமைச் சமத்திற்கும் இதற்கும் வேற்றுமை : - இருபொருள் வேற்றுமைச் சமத்தில் இருபொருள்களுக்கும் உள்ள ஒப்புமையை முன்னர்க்கூறிப் , பின்னர் அவ்விரண்டிற்கும் உரிய வேற்றுமை சமமாகக் கூறப்பட்டிருக்கும் . இஃது அன்னதன்றி ஒரேவிதமான தன்மையையுடைய பொருள்கள் இரண்டை மட்டும் கூறி அவற்றிற்குரிய வேற்றுமையைக் கூறாதிருக்கும் .