அடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதலும் , அடையை விபரீதப் படுத்துப் பொருள் வேறுபட மொழிதலும் என நான்கு வகையினை உடைத்து அவ்வொட்டு என்னும் அலங்காரம் எ-று.
அவற்றுள் ,
1. அடையும் பொருளும் அயல்பட மொழிதல்
எ - டு : 'வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்(து)
உண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு '
இ-ள்: தன்னிடத்துச் செவ்வியையும் வளப்பத்தையும் உடைய தாமரைக்கண் குறைவற்ற நிறைமதுவைச் சேர்ந்து உண்டு களித்து விளையாடுகின்ற வண்டும் . களித்த பலவண்டுகள் சேர்ந்து உண்டு வெறுத்து விட்ட குறைபடு காவியின் மதுவை ஆசைப்பட்டுச் சேருமானதே ! எ - று.
இதனுள் தாமரை என்றது தலைமகளை . காவி என்றது பரத்தையை . வண்டாமரை பிரிந்த வண்டு என்றது தலைமகனை . இது பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்கு வாயில் நோந்த தோழி சொல்லியது.
முகம் - இடம் . ஓர் என்றது அசையுமாம் . வெறி - களிப்பு . வெறிகொள் இனச்சுரும்பு - ஆண்வண்டு ; இதற்கு மது நுகரும் வண்டு எனினும் அமையும்.
வி-ரை: அடையும் பொருளும் அயல்பட மொழிதல் : - சிறப்பிக்க வந்த அடைமொழிகளையும் அவற்றால் சிறப்பிக்கப்படும் பொருளையும் வேறாகக் கூறி , அவற்றால் தம் உள்ளத்துள்ள கருத்தை வெளிப்படுத்துவது இதன் இலக்கணமாகும்.
இப்பாடற்கண் கவிஞன் சொல்லக் கருதிய பொருள் , தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையிடத்து இன்பம் துய்த்தனன் என்பதாம் . ஆனால் அதனை மறைத்து அதற்கு ஒத்த பொருளாகக் கூறப்பட்டது : ஒரு வண்டு தனக்கே உரிய தாமரையிலுள்ள தேனை உண்ணாது , பிற வண்டுகளாலும் நுகரப்பட்ட நீலமலரிடத்துள்ள தேனை உண்டது என்பதாகும் . இங்ஙனம் கூறவே இது ஒட்டணி யாயிற்று. இங்ஙனம் தான் சொல்லக் கருதிய பொருள் ஒன்றாக , அதற்கு வேறான வண்டையும் அதற்கு ஏற்ற அடைமொழிகளையும் கூறியுள்ளமையால் , இது அடையும் பொருளும் அயல்பட மொழிதல் ஆயிற்று.
2 . அடைபொதுவாக்கிப் பொருள் வேறுபட மொழிதல்
எ - டு : ' உண்ணிலவு நீர்மைத்தா யோவாப் பயன்சுரந்து
தண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து
நீங்க லரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே
ஓங்கியதோர் சோலை யுளது '
இ-ள்: மனத்துள்ளே உண்டாகிய குணமுடைத்தாய்ப் , பலர்க்கும் ஏற உபகரித்துத் தண்ணளி யுடைத்தாகிய விரிந்த முகத்தையும், கண்ணோட்டத்தையும் உடைத்தாய்ப் , பிரிதற்கரிய சாயலோடு கூடி நிற்பது ஆகியதொரு வள்ளல் மேலும் ; நடுவுண்டாகிய நீரை யுடைத்தாய் , ஓவா பல வளங்களைக் கொடுத்துத் தட்பமுடைய வண்டுகளைத் தாங்கிய மலர்களை