வண்டுகள் ஒலிக்க, இந்நில வுலகத்து வந்த காற்றானது, கடல் சூழ்ந்த நிலவுலகத்திலுள்ள எவ்வுயிர்களுக்கும் சொல்லுதற்கரிய பேரின்பத்தைத் தோற்றுவித்தது என்பதாம்.
இப்பாடற்கண் கூறப்பட்ட கருத்தா காற்று ஆகும். அதுவே உயிர்களுக்கு இன்பத்தைத் தோற்றுவித்தது எனக் காரகமாகவும், தாதலைத்தல், தாரலைத்தல் ஆகிய செயல்கள் நிகழ்தற்கு ஏதுவாகவும் நிற்றலின், இது கருத்தா காரக ஏது ஆயிற்று. காற்று உயிர்களுக்குப் பேரின்பம் தோற்றியது எனக் கூறலின் இது ஆக்கமாயிற்று.
2. பொருட் காரகவேது
எ- டு : 1 ' கனிகொள் பொழிலருவி கைகலந்து சந்தின்
பனிவிரவிப் பாற்கதிர்கள் தோய்ந்து - தனியிருந்தோர்
சிந்தை யுடனே உயிருணக்குந் தென்மலயம்
தந்த தமிழ்மா ருதம் '
(இ-ள்) மலை மீதுண்டாய பொழில்கள் உகுத்த கனியோடு கலந்து இழியாநின்ற அருவியினுட் புக்குக் கலந்தும், அதனினுண்டாய சந்தனத்தின் தட்பத்துடன் மருவியும், பால் போன்ற சந்திர கிரணங்களில் மூழ்கியும், தனது தன்மை ஒழிந்து கொழுநரைப் பிரிந்திருந்தோர் மனத்தோடு உயிரையும் உணக்கா நின்றது ; பொதிய மலையிற் பிறந்து தமிழோடு பழகிய தென்றற் காற்று எ-று.
இஃது - அழிவு.
வி-ரை: ஒரு செயப்படு பொருளே காரகமாயும், அதுவே ஏதுவாயும் நிற்பின், அது பொருட்காரக ஏதுவாம்.
இப்பாடற்கண் கூறப்பட்ட செயப்படு பொருள் மாருதமாகும். அதுவே பிரிந்திருந்தோரின் மனத்தோடு உயிரையும் வாட்டுகின்றது எனக் காரகமாயும் ; கைகலத்தல் , மருவல், தோய்தல் ஆகிய காரணங்களாலே உயிரை வாட்டிற்று எனக் கூறுதலின் ஏதுவாயும் நிற்றலின், இது பொருட்காரக ஏதுவாயிற்று. காற்று உயிரை வாட்டுகின்றது என்பதால் இது அழிவாயிற்று.
மலயம் தந்த மாருதம் என்பது மலயத்தால் தரப்பட்ட மாருதம் எனப் பொருள்படுதலின், மாருதம் என்பது செயப்படுபொருளாயிற்று. இங்ஙனம் பொருள்கொள்ளாக்கால் கருத்தா காரக ஏதுவிற்கும், இதற்கும் வேற்றுமையின்றாம்.
3. கரும காரகவேது
எ- டு : ' மலையின் அலைகடலின் வாளரவின் வெய்ய
தலையிற் பயின்ற தவத்தால் - தலைமைசேர்
அம்மாதர் புல்லும் அபயன் புயம்புணர
எம்மா தவம்புரிந்தோம் யாம் '
1. சில பிரதிகளில் இதுவும் கருத்தா காரக ஏதுவிற்கே எடுத்துக் காட்டாகக் காட்டப்பட்டுள்ளது. சுன்னாகம், திரு. குமாரசாமிப் புலவரும் இக்கருத்தினரே.