பக்கம் எண் :
 
பொருளணியியல்125

13. ஏதுவணி

57. யாதென் திறத்தினும் இதனின் இது விளைந்ததென்
றேதுவிதந்(து) உரைப்ப(து) ஏது ; அதுதான்
காரக ஞாபகம் எனவிரு திறப்படும்.

எ-ன் , நிறுத்த முறையானே ஏது என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: யாதானும் ஒரு பொருள்திறத்து இதனான் இது நிகழ்ந்ததென்று காரணம் விதந்து சொல்லுவது, ஏது என்னும் அலங்காரமாம் ; அது காரகவேது என்றும், ஞாபகவேது என்றும் இரண்டு கூறுபடும் எ-று.

வி-ரை: காரகம் - தொழிலை, இயற்றுவிப்பது. ஞாபகம் - அறிவிப்பது.

காரகவேது

58. 1முதல்வனும் பொருளும் கருமமும் கருவியும்
ஏற்பது நீக்கமும் எனஇவை காரகம்.

எ-ன், காரகவேது ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : கருத்தா முதல் நீக்கநிலை யீறாகச் சொல்லப்பட்ட இவை ஆறும் காரணமாகத் தோன்றுவது காரக ஏதுவாம் எ- று.

வி-ரை: இந்த நூற்பாவிற்குத் திரு. சுன்னாகம், குமாரசாமிப் புலவர் அவர்கள் 'முதல்வனும் பொருளும் கருமமும் கருவியுமாகிய இவை, ஏற்பதும் நீக்கமும் என இருவகையாகி வருவன காரக ஏதுக்களாம் ' என உரை காண்பர். ஏற்பது - ஒன்றற்கு நன்மையாக நிற்பது. நீக்கம் - ஒன்றனை அழிக்க வருவது. இவ்விருவகையில் அந்நான்கும் வரும் என்பது கருத்து. இங்ஙனம் உரை காண்பதே பொருத்தம் உடைத்தாகும்.

அவற்றுள்,

1. கருத்தா காரகவேது

எ- டு : ' எல்லைநீர் வையகத்(து) எண்ணிறந்த எவ்வுயிர்க்கும்
சொல்லரிய பேரின்பந் தோற்றியதால் - முல்லைசேர்
தாதலைத்து வன்கொன்றைத் தாரலைத்து வண்டார்க்கப்
பூதலத்து வந்த புயல் '

இஃது - ஆக்கம். எல்லைநீர் - கடல். புயல் - காற்று. தோற்றியது - உண்டாக்கிற்று.

வி-ரை: ஒரு வினைமுதலே (கருத்தாவே) தொழிலே இயற்றுவிப்ப தாயும் (காரகமாயும்), பிற தோன்றற்கு ஏதுவாயும் நிற்பின், அது கருத்தாகாரக ஏதுவாம்.

இ- ள் : முல்லை மலரிற் சேர்ந்த தாதினைக் கீழே உதிர்த்து, வளப்பம் மிகுந்த கொன்றை மலர்களையும் உதிரச் செய்து, அவற்றில் உள்ள


1. இவ்விடத்தில் ' முதல்வனும் கருமமும் கருவியுந் தோன்றும் ' என்ற நூற்பாவும், அதற்கேற்ப எடுத்துக்காட்டுகளும் சில பிரதிகளில் காணப்படுகின்றன.