களானவை தங்கண் உண்டாகிய மேதக்க தாதோடு கூடிய மலர்களையும், தங்கண் மதுவினையும், தமது பெரிய கிளைகளாகிய கைகளாலே மேனோக்கித் தாங்கா நிற்கும் எ-று.
மீதேந்தும் - மேனோக்கி நீட்டிக் கொடா நின்றன.
இவ்வணி பொருள்தற்குறிப்பு, ஏதுத்தற்குறிப்பு பயன் தற்குறிப்பு, முதலாக மற்றும் பலவாற்றால் விகற்பித்துக் கூறவும் படும்.
வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள் பொழில் ஆகும். இது பெயராத பொருள். அதன் இயல்பு அவ்வவ்விடங்களிலுள்ள செடி கொடிகள், கிளையும் தளிரும் மலரும் தேனும் உடைத்தாய் இருப்பதாகும். இவ்வியல்பான தன்மைக்கு, 'வேனில் காலத்துத் தனக்கு வெப்பம் தீர உதவிய மேகத்திற்கு நன்றியறிதலாக அப்பொழில் தன்பால் உள்ள பொருள்களைத் தருதலேயாகும் ' எனக் கவிஞன் தான் ஒரு காரணத்தை ஏற்றிக் கூறுதலின், இது பெயராதபொருள் தற்குறிப்பேற்றம் ஆயிற்று.
(29)
தற்குறிப்பேற்றம் உவம உருபுகளோடும் வரும் எனல்
56. அன்ன போலெனும் அவைமுத லாகிய
சொன்னிலை விளங்குந் தோற்றமும் உடைத்தே.
எ-ன், அவ்வலங்காரத்திற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) அன்ன, போல என்பவை முதலாகிய உவமைச் சொல் சில புணர்ந்து விளங்கும் தன்மையும் உடைத்தாம் ; அத் தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் எ-று.
எ-டு : ' காமருதேர் வெய்யவன் எங்கும் கரம்பரப்பித்
தேமருவு சோலை மலர்திறக்கும் - தாமரையின்
தொக்க இதழ்விரித்துப் பார்க்குந்தொலைந் திருள்போய்ப்
புக்க !புரைகிளைப்பான் போல் '
காமருதேர் - அழகு மருவிய தேர். வெய்யவன் - சூரியன். விரித்தல் - திறத்தல். புரை- இடம். கிளைத்தல் - ஆராய்தல்.
வி-ரை, (இ-ள்) அழகு பொருந்திய தேரினையுடைய சூரியன், தனக்குத் தோற்று இருள் சென்று ஒளிந்த இடத்தை ஆராய்ந்து பார்ப்பவன் போல, எவ்விடத்தும் தன் ஒளிக்கதிர்களாகிய கைகளை விரித்து நீட்டித்தேன் பொருந்திய சோலையிலுள்ள மலர்களைத் திறந்து பார்ப்பான் ; மூடியிருக்கும் தாமரை மலரின் இதழ்களையும் விரித்துப் பார்ப்பான் என்பதாம்.
இதன்கண் கூறப்பட்ட பொருள் கதிரவன் தன் ஒளிக்கதிர்களைச் சோலையில் யாண்டும் பரப்புதல் ஆகும். இவ்வியல்பான நிகழ்ச்சிக்குக் ' கதிரவன் தன் பகையாகிய இருள் சென்று ஒளிந்த இடத்தைத் தேடுதற்காகத்தான் அங்ஙனம் செய்கிறான் ' எனக் கவிஞன் தான் குறித்ததொரு காரணத்தை ஏற்றிச் சொல்லுதலின், இது தற்குறிப்பேற்றம் ஆயிற்று. ஈற்றடியில் ' போல் ' என்னும் உவமவுருபு இருத்தலின், இந்நூற்பாவின் இலக்கணத்திற்கு ஏற்புடையதாயிற்று.
(30)
1. ' புரைதிளைப்பான் ' என்பதும் பாடம்.