வி-ரை: இப்பாடற்கண் கூறப்படும் பொருள் நிலா முற்றத்தில் உள்ள வெள்ளிக் கிண்ணத்தில்படும் நிலவின் ஒளியாகும். அதனைக்கண்டு கிளி பால் என்றும் பெண்கள் தம் துகில் என்றும் ஒன்றையொன்றாகத் திரித்து மயங்குகின்றார் என அதனை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்தலின் , இது திரிபு அதிசயமாயிற்று. திரிபு - ஒன்றை ஒன்றாக மயங்கல். இதனை ' மயக்க அணி ' என்றும் கூறுவர்.
(28)
12. தற்குறிப்பேற்றவணி
55. பெயர்பொருள் அல்பொருள் எனவிரு பொருளினும்
இயல்பின் விளைதிற னன்றி அயலொன்று
தான்குறித்(து) ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்.
எ-ன் , நிறுத்த முறையானே தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: பெயரும் பொருளும் , பெயராத பொருளும் என்னும் இரு பொருட் கண்ணும் இயல்பாக நிகழும் தன்மை ஒழியக், கவி தான் கருதிய வேறொன்றினை அவற்றின்கன் ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரமாம் எ - று.
அவற்றுள்,
1. பெயர்பொருள் தற்குறிப்பேற்றம்
எ - டு ; ' மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயுந் தெளிவிசும்பி னின்று ' - முத்தொள்ளாயிரம்
இ - ன் ; நிலவுலகத்தைத் தாங்கிய தோள் வலிமையை உடைய சோழனுடைய மதயானையானது மாறுபட்ட அரசர்களுடைய வெண்கொற்றக் குடையைச் சீறிச் சிதைத்த கோபத்தாலே நம்மேலும் வந்து பாயுமோ? என்று குளிர்ந்த ஆகாயத்திலே நிறைமதியம் எனப்படுவதூஉம் தேயா நிற்கும், தெளிந்த விசும்பின்கண் நின்று எ - று .
வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பெயர்பொருள் சந்திரன் ஆகும். அதன் இயல்பு வளர்தலும் தேய்தலும் ஆகும். இங்ஙனம் இயல்பாக உள்ள தன்மைக்குச் , ' சோழனின் யானை பகைவரின் வெண்கொற்றக் குடைகளைத் தேய்த்த வெகுளியால் , அக்குடைபோன்ற தன்னையும் பாயுமோ ! என்னும் அச்சத்தாலேயாம் ' எனக் கவிஞன் தான் ஒரு காரணத்தை ஏற்றிக் கூறுதலின், இது பெயர்பொருள் தற்குறிப்பேற்றம் ஆயிற்று.
2. பெயராதபொருள் தற்குறிப்பேற்றம்
எ- டு ; ' வேனில் வெயிற்குலர்ந்த மெய்வறுமை கண்டிரங்கி
வானின் வளஞ்சுரந்த வண்புயற்குத் - தானுடைய
தாதுமே தக்க மதுவுந் தடஞ்சினையாற்
போதுமீ தேந்தும் பொழில் '
இ-ள்: முதுவேனிற் காலத்து ஆதித்தன் வெயில் வெம்மைக்கு ஆற்றாது உலர்ந்த தமது மெய்வறுமை கண்டு இரங்கி , வானின்கண் நின்று மழைவளத்தைப் பொழிந்து தமது வாட்டம் நீக்கின முகிலுக்குப் பொழில்