பக்கம் எண் :
 
122தண்டியலங்காரம்

(இ-ள்) ; ஒள்ளிய ஆபரணத்தை உடையாய் ! நினது கள்ளம் மிக்க விழிகளானவை எனது உள்ளத்துப் புகுந்து உலாவுதலால் சிறிதாய்த் தோன்றின ; அவை புகுந்து என்னுள் ள ம் முழுதும் தமதுள்ளே அடக்கினமையின் அவ்வுள்ளம் சிறிதாய்த் தோன்றிற்று . இவற்றுள் விழி பெரியவோ ? உள்ளம் பெரிதோ ? சொல்லுவாயாக எ - று .

வி-ரை: இப்பாடற்கண் கூறப்படும் பொருள் விழி ஆகும். அது உள்ளம் புகுந்து உலாவுதலின் உள்ளம் பெரிதோ ? அன்றி அது உள்ளம் முழுமையும் உடன் பருகுவதால் அவ்விழி பெரியதோ ? என ஐயுற்றுக் கூறும்முகத்தான் அவ்விழியை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்தலின் , இது ஐய அதிசயமாயிற்று.

5. துணிவதிசயம்

எ - டு ; ' பொங்கிச் செறிந்து புடைதிரண்டு மீதிரண்டு
செங்கலசக் கொங்கை திகழுமால் - 1 எங்கோன்தன்
தில்லையே யன்னார் இவரல்குல் தேரின்மேல்
இல்லையோ உண்டோ இடை'

இ-ள்: வளர்ந்து நெருங்கி அடிபரந்து திரண்டு மேலே இரண்டு சிவந்த கலசம் போன்ற கொங்கை விளங்கா நின்றன ; ஆதலால், எந்தலைவனாகிய பரமசிவனுடைய தில்லைப்பதியை ஒத்த இவருடைய அல்குலாகிய தேரின் மேல் , இடை இல்லையோ ? உண்டு எ - று .

ஒகாரம் இரண்டனுள் முன்னது எதிர்மறை ; பின்னது அசைநிலை பொங்குதல் - வளர்தல். செறிதல் - நெருங்குதல். திகழல் - விளங்கல்.

வி-ரை: இப்பாடற்கண் கூறப்படும் பொருள் இடை ஆகும் . அது இல்லையோ ! உண்டோ ! என முன்னர் ஐயுற்றுப் , பின்பு ' மீதிரண்டு செங்கலசக் கொங்கை திகழ்வதால் ' உண்டு எனத் துணிந்து கூறுமுகமாக, அவ் இடையை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்தலின் , இது துணிவு அதிசயமாயிற்று.

6. திரிபதிசயம்

எ - டு ; ' திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
பைங்கிள்ளை பாலென்று வாய்மடுக்கும் - அங்கயலே
காந்தர் முயக்கொழிந்தார் கைவறிதே நீட்டுவரால்
ஏந்நிழையார் பூந்துகிலா மென்று '

இ-ள்: நிலா முற்றத்திருந்த வெள்ளிக் கிண்ணத்து உள்ள நிலவைப் பசுங்கிளிகள் , பாலென்று கருதி வாய் மடுக்கும் ; அதுவேயுமன்றி , அங்கு ஒரு புறத்துத் தங்கொழுநரைப் புணர்ந்து நீங்கினாராகிய ஏந்திழையார் தாம் ஒழித்த துகிலெனக் கருதி அந்நிலவிலே கையை நீட்டுவார் எ - று.

வள்ளம் - வட்டில் . காந்தர் - தலைவர் . பிறவாற்றான் வருவனவும் கண்டு கொள்க.


1. 'எங்கள்கோன் ' என்பதும் பாடம் .