வி-ரை: இப்பாடற்கண் கூறப்படும் மனப்படும் ஒரு பொருள் திரிபுரத்தை எரித்த தீயாகும். அத்தீ படர்ந்ததால்தான் வான்வெளி இன்னும் நெருப்பறாது இருக்கின்றது என அதனை உலக நடை கடந்து அதிசயித்து உரைத்திருத்தலின் , இது பொருள் அதிசயமாயிற்று.
2. குணவதிசயம்
எ - டு ; 'மாலை நிலவொளிப்ப மாதர் இழைபுனைந்த
நீல மணிகள் நிழலுமிழ - மெல்விரும்பிச்
செல்லும் இவள்குறித்த செல்வன்பாற் சேர்தற்கு
வல்லிருளா கின்ற மறுகு '
இ-ள்: மாலைக் காலத்தில் தோன்றிய நிலவானது ஒளிப்ப, ஆசையினாற் புனைந்த அணிகளிலுள்ள நீலமணிகள் ஒளியை யுமிழ, இவள் காதலோடு இச்சித்துச் செல்லும்படி குறித்த தலைவனிடத்திற் போதற்குத் , தெருக்கள் செறிந்த இருளாகின்றன எ - று .
மாலை - இரவு. மாதர் - காதல். புனைதல் - இழைத்தல் , அணிதல் . இழை - ஆபரணம். உமிழ - பரப்ப. செல்லுமிவள் - தலைமகள் . வல்லிருள் - செறிந்த இருள் , மறுகு - தெருவு.
வி-ரை: இப்பாடற்கண் கூறப்படும் பொருள் நீலமணிகளின் ஒளியாகும். அவ்வொளியே தலைவி தான் செல்லும் வீதியில் இருளைச் செய்கின்றது . என அதனை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்திருத்தலின், இது குண அதிசயமாயிற்று . நீலமணியின் நிறப்பண்பைக் கூறியிருத்தலின் குணமாயிற்று.
3. தொழிலதிசயம்
எ - டு ; ' ஆளும் பரியும் கரியும் சொரிகுருதி
தோளுந் தலையுஞ் சுழித்தெறிந்து - நீள்குடையும்
வள்வார் முரசும் மறிதிரைமேற் கொண்டொழுக
வெள்வாள் உறைகழித்தான் வேந்து '
இ-ள்: மள்ளர்களும், குதிரைகளும் , யானைகளும் சொரிகின்ற குருதி வெள்ளமானது, தோள்களையும் தலைகளையும் சுழித்து வீசி , நீண்ட குடைகளையும் வார் இறுக்கிய பேரிகைகளையும் மடங்குகின்ற அலைகளையுடைய கடலின்மேல் அடித்துக்கொண்டு ஓடும்படி அரசன் வெண்மையாகிய வாளை உறையினின்று நீக்கினான் எ - று .
வி-ரை: இப்பாடற்கண் கூறப்படும் தொழில் உறையினின்றும் வாளை எடுத்ததாகும். அதனை எடுத்தவுடனேயே பகைவர்தம் படையினின்று ஒழுகிய குருதியில் தோள் , தலை முதலியன மிதந்தன என அத்தொழிலை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்திருத்தலின், இது தொழில் அதிசயமாயிற்று.
4 . ஐயவதிசயம்
எ - டு ; ' உள்ளம் புகுந்தே யுலாவும் ஒருகால்என்
உள்ளம் முழுதும் உடன்பருகும் - ஒள்ளிழைநின்
கள்ளம் பெருகும் விழிபெரிய வோ ! கவல்வேன்
உள்ளம் பெரிதோ உரை