ஆகிய அடைமொழிகளைக் கடலுக்கு விபரீதமாகக் (மாறுபாடாக) கூறியிருத்தலின், இது அடையை விபரீதப்படுத்துப் பொருள் வேறுபட மொழிதல் ஆயிற்று.
(26)
11. அதிசயவணி
53. மனப்படும் ஒருபொருள் வனப்புவந் துரைப்புழி
உலகுவரம்(பு) இறவா நிலைமைத் தாகி
ஆன்றோர் வியப்பத் தோன்றுவ(து) அதிசயம்.
எ-ன் , நிறுத்த முறையானே அதிசயம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ; கவி, தான் கருதிய பொருளினது வனப்பை உவந்து சொல்லுங்கால் , உலகநடை இறவாத தன்மைத்தாகி உயர்ந்தோர் வியப்புறச் சொல்லுவது அதிசயம் என்னும் அலங்காரமாம் எ - று .
வி-ரை ; 'உலக வரம்பு இறவா ' என்பதற்கு உலக நடையினைக் கடந்து எனப் பொருள் கொள்ளுதலே சிறப்பாம். இதற்குப், பின்னுள்ள பாடல்களே சான்றாகக் காணப்படுதலானும், முதனூலும் , வீரசோழியம் முதலாயினவும் இங்ஙனமே உரைத்தலானும் இங்ஙனம் பொருள் கொள்ளுதலே சிறப்புடைத்தாம்.
(27)
அதன் வகை
54. அதுதான்
பொருள்குணம் தொழில்ஐயம் துணிவே திரிபெனத்
தெருளுறத் தோன்றும் நிலைமைய தென்ப.
எ- ள் , அவ்வலங்காரத்தை விரித்து உணர்த்துதல் நுதலிற்று
இ-ள்: மேற்சொல்லப்பட்ட அவ்வலங்காரம் பொருளதிசயம், குணவதிசயம், தொழிலதிசயம், ஐயவதிசயம், துணிவதிசயம், திரிபதிசயம் என ஆறு வகையான் தெளிவுறத் தோன்றும் நிலைமையை யுடைத்து எ- று .
அவற்றுள்,
1. பொருளதிசயம்
எ - டு ; 'பண்டு புரமெரித்த தீமேற் படர்ந்தின்றும்
அண்ட முகடு நெருப்பறா(து) - ஒண்டளிர்க்கை
வல்லி தழுவக் குழைந்த லடமேரு
வில்லி நுதல்மேல் வழி. '
இ-ள்: ஒளியையுடைய தளிர்க்கைக் கொடியாகிய மலைமகள் தழுவக் குழைந்த திருமேனியையும் , வடமேருவாகிய வில்லினையும் , மேல் நோக்கிய நெற்றிக்கண்ணினையும் உடைய பரமசிவன் முற்காலத்துத் திரிபுரத்தை நகைத்து எரித்த தீயானது விரைந்தோடுதலால் , இக்காலத்து அண்டத்து உச்சியில் நெருப்பு அறாது எ - று .
நெருப்பு என்றது இடியை.