பக்கம் எண் :
 
134தண்டியலங்காரம்

14. நுட்பவணி

63. தெரிபுவேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்
அரிதுணர் வினைத்திறம் நுட்ப மாகும்.

எ-ன், நிறுத்த முறையானே நுட்பம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: தெரிந்து கொண்டு வேறுபட மொழியாது குறிப்பினானாதல், தொழிலினானாதல் அரிதாக நோக்கி உணருந் தன்மையை யுடையது நுட்பம் என்னும் அலங்காரமாம்.எ-று

அவற்றுள்,

1. குறிப்பு நுட்பம்

எ-டு: 'காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததால்
பேதையர் ஆயம் பிரியாத - மாதர்
படரிருள்கால் சீக்கும் பகலவனை நோக்கிக்
குடதிசையை நோக்குங் குறிப்பு'

இ-ள்: காதலிக்கப்பட்ட தலைவனுடைய மெல்லுயிர்க்குப் பரிகாரஞ் செய்தது போலும், மடப்பத்தையுடைய ஆயத்தார்ப் பிரியாது சூழப்பட்டமாதர், உலகிற்குப் படர் செய்யும் இருளினது அடியை அறுக்கின்ற ஞாயிற்றினைப் பார்த்து மேற்றிசைப் பார்க்கும் உள்ளக்கருத்து எ-று.

குடதிசை - மேற்கு. இதில் போந்த பொருள் , மாலைக் காலத்துக் கூட்டம் நேர்ந்தவாறு.

வி-ரை: இதன்கண் தலைவி குடதிசையை நோக்கிய குறிப்பானது தலைவனின் உயிர்க்குக் காவலாயிற்று என்னும் குறிப்பால், தலைவி இரவுக் குறிக்கு உடன்பட்டாள் என்னும் கருத்து நுட்பமாகப் பெறப்படுதலின், இது குறிப்பு நுட்பமாயிற்று.

2. தொழில் நுட்பம்

எ-டு: 'பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள்
கூடல் அவாவாற் குறிப்புணர்த்தும் - ஆடவற்கு
மென்தீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
இன்தீங் குறிஞ்சி யிசை.'

இ-ள்: பாடுந் தொழிலைப் பயிலும் குளிர்ந்த மொழியாள் தனது பணைத்தோளினால் தலைவனைத் தழுவ வேண்டும் என்னும் ஆசையினாலே தலைவற்குத் தன் உள்ளக் கருத்தை அறிவியா நின்றாள், மெல்லிய இனிய நரம்பையுடைய யாழிலே முறையாக ஆக்கினாள், தித்தித்த ஒசையை யுடைய குறிஞ்சியாகிய பண்ணை எ-று.

தொடை-நரம்பு. குறிப்பு-கருத்து. குறிஞ்சிக்குக் காலம் இடையாமம் ஆதலால், இடையாமத்திற் கூட்டம் நேர்ந்தவாறு.

வி-ரை: இதன்கண் தலைவி குறிஞ்சிப் பண்ணைப் பாடுதலாகிய தொழிலால், தனக்குள்ள புணர்தல் விருப்பத்தை நுட்பமாகத் தலைவனுக்கு அறிய வைத்தலின், இது தொழில் நுட்பமாயிற்று.

குறிஞ்சிக்குப் புணர்தல் உரிப்பொருளாதலும், அதற்குரிய சிறுபொழுது அவ்வொழுக்கத்திற்கேற்ற இடையாம மாதலும் அறிக.