15. இலேசவணி 64. குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின் மறைத்துரை யாடல் இலேச மாகும். எ-ன், நிறுத்த முறையானே இலேசம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கருதியது வெளிப்படுக்குஞ் சத்துவமாகிய குணங்களைப் பிறிதொன்றால் நிகழ்ந்தனவாக மறைத்துச் சொல்லுவது, இலேசம் என்னும் அலங்காரமாம் எ-று. சத்துவம் என்பன - வெண்பளிங்கிற் செந்நூல் கோத்தால் அதன் செம்மை புறம்பே தோன்றுமாறு போல, உள்ளங் கருதியது புலனாக்கும் குணங்கள்; அவை: சொற்றளர்வு, மெய்வியர்ப்பு, கண்ணீர் நிகழ்ச்சி, மெய் விதிர்ப்பு, மெய்வெதும்பல், மெய்ம்மயிர் அரும்பல் முதலியன. எ-டு: 'கல்லுயர்தோட் கிள்ளி பரிதொழுது கண்பனிசோர் மெல்லியலார் தோழியர்முன் வேறொன்று - சொல்லுவரால் பொங்கும் படைபரப்ப மீதெழுந்த பூந்துகள்சேர்ந்(து) எங்கண் கலுழ்ந்தனவால் என்று. இ-ள்: மலை போன்ற பெரிய தோள்களையுடைய சோழன் ஏறிய குதிரையைத் தொழுது நீர்வார்ந்த கண்ணையுடைய மெத்தென்ற நடையையுடைய நல்லார், `எமது கண்ணீர் வார்தற்குக் காரணம், சினத்தையுடைய சேனை பரந்து வருதலால் ஆகாயத்தில் எழுந்த பொலிவுடைய தூளியானது உட்புக்குக் கண்ணீர் வார்ந்தது' என்று தோழியர்க்கு நிகழ்ந்தது ஒழிய வேறோர் உபாயத்தான் மறைத்துச்சொல்லினார் எ-று. கல்-மலை வி-ரை: இப்பாடற்கண் குதிரைமீது சோழன் உலா வருதலைக் கண்ட பெண்கள், அவன் அழகைக் கண்டு காமுற்றதால் ஏற்பட்ட கண்ணீரை, அங்கெழுந்த புழுதியால் ஏற்பட்டது எனப் பிறிதின் மறுத்துரையாடியிருத்தலின், இது இலேசவணியாயிற்று. எ-டு: 'மதுப்பொழிதார் மன்னவனை மால்கரிமேற் கண்ட விதிர்ப்பு மயிரரும்பு மெய்யும் - பதைத்தாள் வளவா ரணநெடுங்கை வண்திவலை தோய்ந்த இளவாடை கூர்ந்த தென' என்பதும் அது. இ-ள்: தேன்பொழி தாரையுடைய சோழனை உயர்ந்த களிற்றின் மேல் வரக்கண்டு அதனால் உண்டாகிய தன்னுடைய மேனி நடுக்கத்தையும், மெய்ம்மயிர் அரும்புதலையும், `அவன் ஏறிவந்த வளப்பமுடைய களிற்றின் நெடிய கையிலுண்டாகிய வளவிய நீர்த்திவலையைக் கொண்டுவந்த இளவாடை என் மேனியை நனைத்ததனாலே வந்தது என் மேனி நடுக்கமும் மயிர் அரும்புதலும் என நிகழ்ந்தது மறைத்து தோழியர்க்குச் சொல்லினாள் எ-று.
|