வி-ரை:, இ-ள் ; சினம் பொருந்திய வேற்படையை யுடைய வீரனால் துதிக்கையை இழந்த சிவந்த கண்களை யுடைய காட்டுயானை தன் முன்னே வந்தபொழுது, ஒரு பெண், தன் கைகளை நெரித்துக்கொண்டு, பெருமுச்சு எறிய, கால் தளர்ந்து, உடல் நடுங்க, மைதீட்டிய செவ்வரி பரந்த கண்களில் நீர் ததும்ப, வாய் உலர்ந்தாள் என்பதாம்.
அணங்கு, விலங்கு, கள்வர், இறை ஆகிய நான்கானும் அச்சம் பிறக்கும் என்பர் தொல்காப்பியர். இப்பாடற்கண் யானையாகிய விலங்கு காரணமாகப் பிறந்த அச்சத்தைக் கூறுதலின், இது அச்சமாயிற்று.
3. இழிப்பு
எ-டு ; ' உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும்
குடரும் கொழுங்குருதி யீர்ப்ப - மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி
கருநடரைச் சீறுங் களம்'
கொழுங்குருதி - நிணக்குருதி. பெற்றி - தன்மை. கிள்ளி - சோழன்.
வி-ரை:, இ-ள் ; வெற்றியைத் தரும் போரினைச் செய்யும் சோழன் கருநாடக அரசர்களைச் சினந்து தாக்கிய போர்க்களமானது , உடைந்த தலைகளையும் , மூளைகளையும், கொழுப்பையும், தசைத் திரளையும் , எலும்பையும் , குடலையும், செழித்த இரத்த வெள்ளம் இழுக்க, நெருங்கிய பேய்கள் பெருங் கூத்தாடும் தன்மையை உடையது என்பதாம்
இழிப்பு - அருவருப்பு. இதனை இளிவரல் என்றும், அது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை ஆகிய நான்கினிடமாகப் பிறக்கும் என்றும் , தொல்காப்பியர் கூறுவர். இப்பாடற்கண் போர்க்களத்திலுள்ள உடைதலை, ஊன் முதலியவைகளைக் கூறுமுகத்தான் அருவருப்புச் சுவை தோன்றலின் , இது இழிப்பாயிற்று.
4 . வியப்பு
எ - டு ; ' முத்தரும்பிச் செம்பொன் முறிததைந்து பைந்துகிரின்
தொத்தலர்ந்து பல்கலனுஞ் சூழ்ந்தொளிரும் - கொத்தினதாம்
பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன்
தன்னேர் பொழியுந் தரு '
1 இ-ள்: பொன்னையும், அழகிய மணிகளையும் அலைத்துக்கொடு வருகின்ற பொலிவுடைய காவிரி நாடனுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட கற்பகத்தரு , முத்தமாகிய அரும்பை அரும்பிச் சிவந்த பொன் முறியாய தளிரினாலே செறிந்த பச்சைத் துகிராகிய கொத்துக்களை உடைத்தாய்ப் பலவகைப்பட்ட ஆபரணங்களால் சூழப்பட்டு விளங்கிய பணைகளை உடைத்தாய் இருக்கும் எ - று .
தரு - கற்பகத்தரு.
வி-ரை:; முன்னர்க் காணப்படாததொன்றைக் காணுங்கால் ஏற்படும் உள்ள மகிழ்ச்சியே வியப்பாகும் . இது புதுமை, பெருமை , சிறுமை, ஆக்கம் ஆகிய நான்கும் பற்றிப் பிறக்கும் என்பர் தொல்காப்பியர். இப்பாடற்கண்
1. இவ்வரை சில பிரதிகளில் இல்லை.