பக்கம் எண் :
 
142தண்டியலங்காரம்

வேய்தல் - சூடல் , தூது - தூதன் . இசைத்தல் - சொல்லல்.

வி-ரை:, இ-ள்: கொடிய போரில் வாகை சூடிய தோளினையுடைய மன்னன் ஒருவனின் மகளைத் தனக்குத் தருமாறு பகை மன்னன் ஒருவன்தூது விடுக்க, அவனைக் கண்டதும் தன் கைகளைப் பிசைந்து, வாயை மடித்துக் கண்சிவந்து வெவ்விய பெருமூச்செறிந்து உடல் நடக்குற்று வியர்த்துச் சினந்து போர்புரியவும் ஆயத்தமானான் என்பதாம்.

இதற்கு இவ்வாறன்றி திரௌபதியைச் சபைக்கு அழைத்து வருக எனக் துரியோதனன் தூதுவனை நோக்கிக் கூற, அது கேட்ட வீமன் இங்ஙனம் சினந்தான் என்றும் பொருளுரைப்பர். இதற்குத்தகப் பாடலில்யாதொரு குறிப்பும் இன்மையின், முன்னைய பொருளே சிறப்புடைத்தாம்

இதனைத் தொல்காப்பியர் வெகுளி என்பர். இது உறுப்பறை, குடிகோள், அலை, கொலை ஆகிய நான்கும்பற்றிப் பிறக்கும் என்பர். அரசன் ஒருவன் தன் மகளைத் தகுதியற்ற அரசன் ஒருவன் கேட்க, அது பொழுது அவனுக்கு எழுந்த வெகுளியை இப்பாடல் விவரித்தலின், இது குடிகோள் பற்றிய உருத்திரமாயிற்று.

8. நகை

எ - டு ; ' நாண்போலும் தன்மனைக்குத் தான்சேறல் இந்நின்ற
பாண்போலும் வெவ்வழலிற் பாய்வதூஉம் - காண்தோழி !
கைத்தலங் கண்ணாக் களவுகாண் பான்ஒருவன்
பொய்த்தலைமுன் 1 னீட்டியற்றும் போந்து '

பாண் - பாணன். காண் தோழி என்றது கேட்பாயாக தோழி என்றவாறு. சேறல் - வருதல்.

வி-ரை:இ-ள்: தோழி ! இதனைக் காண்பாயாக ! தன் இல்லத்திற்குத் தான் வருவதும் நம் தலைவனுக்கு நாணம் போலும். நாம் அவர் வரவை மறுப்பின் , அவர் தீயிற் பாய்வர் என இப்பாணனை சொல்வதும் இடத்திற்கேற்ப இவனுரைக்கும் கற்பனை போலும். தலைமகன் நேரில் தான் வாராது இப்பாணன் வரவிட்டது, கைகளையே கண்ணாகக் கொண்டு இரவில் களவு புரிவான் ஒருவன், தான் நுழைவதற்கு முன்னே பொய்த்தலையை நீட்டுவது போலாம் என்பதாம்.

இது தலைமகனது புறத்தொழுக்கங் கண்டு வருந்திய தலைவி, அவனால் அனுப்பப்பட்ட பாணனை நினைந்து தோழியிடம் நகையாடிக் கூறியதாகும்.

இச்சுவையைத் தொல்காப்பியர் நகை என்று குறிப்பிடுவர். இது எள்ளல், இளமை, பேதைமை, மடன் ஆகிய நான்கும்பற்றிப் பிறக்கும் என்பர். இது தலைமகனையும் அவனால் அனுப்பப்பட்ட பாணனையும் ஒருங்கு எள்ளி நகையாடுதலின், இது எள்ளல் பற்றி வந்த நகையாயிற்று.

இவையெல்லாம் தம்மில் தோன்றலும், பிறரில் தோன்றலும் எனப் பலவகைப்படும்; அவையெல்லாம் கூத்த நூலிற் கூறியவாறு கண்டு கொள்க,

(43)


1. 'நீட்டியது போன்று' என்பதும் பாடம்