19. தன் மேம்பாட்டுரையணி
70. தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.
எ-ன், நிறுத்த முறையானே தன்மேம்பாட்டுரை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ; ஒருவன் தன்னைத்தானே புகழ்வது , தன் மேம்பாட்டுரை என்னும் அலங்காரமாம் எ - று .
எ-டு ; ' எஞ்சினா ரில்லை யெனக்கெதிரா இன்னுயிர்கொண்(டு)
அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப்
பேரா தவராகத் தன்றிப் பிறர்முதுகிற்
சாராவென் கையிற் சரம் '
இதனாற் போந்த பொருள், எனக்கு எதிராய் முன் நின்று பொருது பிழைத்தார் இல்லை என்றவாறு.
வி-ரை, இ-ள் ; கொடிய' போரில் எனக்கு எதிராக வந்து முன்னின்று பொருது, தமது இனிய உயிரைத் தப்புவித்துக் கொண்டு பிழைத்தார் எவருமில்லை ; எனக்கு அஞ்சியவர்கள் அஞ்சாது விலகிச் செல்வாராக ; என்கையால் எய்யப்படும் அம்புகள், புறங்கொடுத்துச் செல்லாதவர்களின் மார்பிலன்றி, புறங் கொடுப்பாரது முதுகில் சேரமாட்டா என்பதாம்.
இது ஒன்னாதார் படைகெழுமித் தன் ஆண்மை எடுத்துரைத்தலின் தன் மேம்பாட்டுரை ஆயிற்று. இதனைப் புறப்பொருள் இலக்கணத்தில் 'நெடுமொழிவஞ்சி' என்றும், 'நெடுமொழி கூறல் 'என்றும் கூறுவர்.
(44)
20. பரியாயவணி
71. கருதியது கிளவா(து) அப்பொருள் தோன்றப்
பிறிதொன்(று) உரைப்பது பரியா யம்மே.
எ-ன், நிறுத்த முறையானே பரியாயம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ; தான் கருதியதனைக் கூறாது அப்பொருள் தோன்றப் பிறி தொன்றினைக் கூறுவது, பரியாயம் என்னும் அலங்காரமாம் எ-று.
எ - டு ; ' மின்னிகரா மாதே ! விரைச்சாந் துடன்புணர்ந்து
நின்னிகரா மாதவிக்கண் நின்றருள்நீ - தன்னிகராம்
செந்தீ வரமலருஞ் செங்காந்தட் போதுடனே
இந்தீ வரங்கொணர்வல் யான் '
(இ-ள்) ; 1 மின்னுக்கு உவமையாகிய மாதே ! விரையினை உடைத்தாகிய சந்தன மரத்தைத் தழுவி உனக்கு நிகராய் இருக்கின்ற இம்மாதவிக் கீழே நிற்பாயாக ; தனக்கு நிகராய் இருக்கின்ற சிவந்த தீயினது ஒளி புலப்பட, மலர்ந்த சிவந்த காந்தட் பூவுடனே நல்ல குவளை மலருங் கொண்டு நின் குழற்கு அணிய வாராநின்றேன் என்று இடத்து நிறீஇ நீங்கினாள் எ - று .
1. இவ்வுரை சில பிரதிகளில் இல்லை.