பக்கம் எண் :
 
144தண்டியலங்காரம்

மாதவி - குருக்கத்தி. சாந்தம் - சந்தனம் . இந்தீவரம் - குவளை மலர் . இது , குறியிடத்து உய்த்து நீங்குவாள் கூறியது.

வி-ரை: இப்பாடலில் தோழி கருதிய பொருள் தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்க நினைப்பதாகும் . ஆயினும் அதனைக் கூறாது , காந்தள் மலரையும் குவளைமலரையும் கொண்டு வரும்வரை நீ இங்கிருப்பாயாக எனப் பிறிதொன்று உரைப்பதால் , இது பரியாயமாயிற்று.

ஒட்டணிக்கும் இதற்கும் உரிய வேறுபாடு :- தான் கருதிய கருத்தினை மறைத்தலில் இதற்கும் ஒட்டணிக்கும் வேற்றுமையின்றேனும் , ஒட்டணியில் தான் கருதிய கருத்தினைக் கூறாது அதற்கு ஒத்த கருத்தினைக் கூறுதலும் இவ்வணியில் தான் கருதிய கருத்தினைக் கூறாது அதற்கு வேறான கருத்தைக் கூறுதலும் ஆகிய வேற்றுமையுள்ளமையின் இவை வேறாயின.

(45).

21. சமாயிதவணி

72. முந்துதான் முயல்வுறூஉந் தொழிற்பயன் பிறிதொன்று
தந்ததா முடிப்பது 1சமாயித மாகும்.

எ-ன், நிறுத்த முறையானே சமாயிதம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: முன்பு தன்னால் முயலப்பட்ட தொழிலினது பயனானது அத்தொழிலால் அன்றிப் பிறிதொன்றால் நிகழ்ந்ததாகக் கூறி முடிப்பது சமாயிதம் என்னும் அலங்காரமாம் எ-று.

எ-டு: ' அருவியங் குன்றம் அரக்கன் பெயர்ப்ப
வெருவிய வெற்பரையன் பாவை - பெருமான்
அணியாகம் ஆரத் தழுவினாள் தான்முன்
தணியாத வூடல் தணிந்து '

இ-ள்: முன்பு தீராத ஊடலை உடையளாய் இருக்கின்ற மலையரையன் பயந்த பாவையாகிய உமையானவள் , அருவியினை உடைத்தாய் , அழகு பொருந்தி யிருக்கப்பட்ட கைலைமலையை இராவணன் அலைப்ப வெருவி , முக்கட் கடவுளினது அழகிய மார்பகத்தை ஊடல் தணிந்து தானே தழுவினாள் எ - று.

வி-ரை: இப்பாடலில் சிவபெருமான் முன்னதாக முயன்ற தொழில் உமையம்மையின் ஊடலைத் தணிவிப்பதாகும் . ஆனால் அப்பயன் அம் முயற்சியால் கிட்டாது இராவணன் மலையை அசைத்ததால் கிடைத்ததாகக் கூறப்பட்டிருத்தலின் , இது சமாயித மாயிற்று.

22 . உதாத்தவணி

73. வியத்தகு செல்வமும் மே்ம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்.

எ-ன், நிறுத்த முறையானே உதாத்தம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: வியக்கத்தக்க செல்வத்து உயர்ச்சியையும் , மேம்பட்ட உள்ளத்து உயர்ச்சியையும் மிகுத்துச் சொல்வது உதாத்தம் என்னும் அலங்காரமாம் எ-று .


1. 'சமாகித மாகும் ' என்பதும் பாடம்.