1 . செல்வ மிகுதி
எ - டு : 'கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்
என்றும் வறிஞர் இனங்கவர்ந்தும் - ஒன்றும்
அறிவரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம
செறிகதிர்வேற் சென்னி திரு '
கவர்தல் - கொள்ளுதல் . ஆல் - அசை . சென்னி - சோழன்.
வி-ரை:இ-ள்: சினந்து வருகின்ற வலிய அரசர்களுடைய செல்வங்கள் பலவற்றையும் நாளும் கவர்ந்துகொண்டு வருதலானும் , வறுமையுற்றோர் தாம் கூட்டத்துடன் சென்று எப்பொழுதும் வேண்டியவாறு எடுத்துக் கொள்ளப்படுதலானும் , நிறைந்த ஒளியையுடைய வேற்படையையுடைய சோழனது செல்வமானது சிறிதளவேனும் அளவிட்டறியப் படாததாய் நிற்கும் என்பதாம்.
இப்பாடற்கண் சோழனுடைய செல்வத்தினது வியத்தகு நிலைமை பாராட்டப்பெற்றிருத்தலின் , இது உதாத்தமாயிற்று.
2. உள்ள மிகுதி
எ - டு: 'மண்ணகன்று தன்கிளையின் நீங்கி வனம்புகுந்து
பண்ணுந் தவத்திசைந்த பார்த்தன்தான் - எண்ணிறந்த
மீதண்டர் கோன்குலையும் வெய்யோர் குலந்தொலைத்தான்
கோதண்ட மேதுணையாக கொண்டு '
இ-ள்: இராச்சியத்தைக் கைவிட்டுத் தன் சுற்றத்தை அகன்று காட்டிற் புகுந்து செய்யப்பட்ட தவத்தால் வருந்தி யிளைத்த பார்த்தனானவன், எண்ணளவற்ற ஆகாயத்துத் தேவர்கட்குக் கோமானாகிய இந்திரன் நடுங்க வரும் உக்கிரத்தையுடைய அசுரர் குலங்கெட அறுத்தான் , தனது கோதண்டமே துணையாக எ - று.
பார்த்தன் - அருச்சுனன் , அண்டர் - தேவர் . கோதண்டம் - வில்.
வி-ரை: இப்பாடற்கண் அருச்சுனன் தன்னுடைய ஒரே வில்லின் துணை கொண்டு அவுணர் குலமனைத்தும் அழித்தான் என அவனுடைய உள்ள மிகுதி கூறப்பட்டிருத்தலின் , இது உதாத்தமாயிற்று.
இவ்வுதாத்த அணியை 'வீறுகோளணி ' என்றும் கூறுவர்.
23 . அவநுதியணி
74. சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை
மறுத்துப் பிறிதுரைப்ப(து) அவநுதி யாகும்.
எ-ன் , நிறுத்த முறையானே அவநுதி என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: சிறப்பினாலும் , பொருளினாலும் , குணத்தினாலும் ஆகிய உண்மையை மறுத்துப் பிறிதொன்றாக உரைப்பது , அவநுதி என்னும் அலங்காரமாம் எ - று.