பக்கம் எண் :
 
146தண்டியலங்காரம்

வி-ரை: யாதானும் ஒரு பொருளிலுள்ள உண்மைத் தன்மையை மறுத்துப் பிறிதொரு தன்மையை அதன்கண் ஏற்றி உரைப்பது அவநுதி யாகும் . இங்ஙனம் உண்மையை மறுத்துப் பிறிதுரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும்.

அவற்றுள்.

1 சிறப்பவநுதி

எ -டு: 'நறைகமழ்தார் வேட்டார் நலனணியும் நாணும்
நிறையும் நிலைதளரா நீர்மை - அறநெறிசூழ்
செங்கோலன் அல்லன் கொடுங்கோலன் தெவ்வடுபோர்
வெங்கோப மால்யானை வேந்து '

இ-ள்: நறுநாற்றத்தையுடைய மாலையை ஆசைப்பட்ட மடவாருடைய அழகும் , அணியும் , நாணும் , நிறையும் நிறை தளராதபடி தாங்கும் அறநெறியினை உடைத்தாகிய செங்கோலை உடையவனல்லன்; கொடுங் கோன்மை உடையவன் ; போர்க்களத்துப் பகைவரை அட்ட வெவ்விய கோபத்தையுடைய பெரிய யானையையுடைய வேந்தன் எ - று.

வி-ரை:: இப்பாடற்கண் அரசனுக்குச் சிறப்பாயுள்ளதும் , உண்மையாயுள்ளதுமான செங்கோன்மையை மறுத்துக் கொடுங்கோன்மையை அவன்மீது ஏற்றிச் சொல்லப்பட்டிருத்தலின் , இது சிறப்பவநுதி ஆயிற்று . அரசனது மாலையை விரும்புவாருக்கு அவன் கொடுங்கோன்மையன் ஆவான் எனவே, அவனுடைய இன்பச் சிறப்பும் , இதனால் இவர்கட்கன்றி ஏனையோர் களுக்கெல்லாம் செங்கோலனே ஆவன் என்பதும் பெறப்படுதலின் அவனுடைய குணச்சிறப்பும் ஒருங்கு விளக்கி நிற்றல் காண்க.

2 பொருளவநுதி

எ - டு : 'நிலனாம் விசும்பாம் நிமிர்கால்நீர் தீயாம்
அலர்கதிராம் வான்மதியாம் அன்றி - மலர்கொன்றை
ஒண்ணறுந் தாரான் ஒருவன் 1இய மானனுமாய்
எண்ணிறந்த எப்பொருளு மாம் '

இ-ள்:விரிந்த கொன்றைப் பூவினாற் செய்த நறுநாற்றத்தையுடைய ஒள்ளிய மாலையை அணிந்தவனும் , ஏகனும் ஆகிய பரமசிவன் , நிலமும் , ஆகாயமும் , உயர்ந்த காற்றும் , நீரும் , தீயும் , பரந்த கதிரையுடைய இரவியும் ,வெள்ளிய மதியமும் ஆகிய ஏழாதலுமன்றி ஆன்மாவுமாய் எண்ணிறந்த எல்லாப் பொருளுமாவான் எ - று.

வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள் சிவபெருமான் ஆவர். அப்பெருமானுக்கு இயல்பாகவும் உண்மையாகவும் உள்ள ஒருவனாந் தன்மையை மறுத்து , எண்ணிறந்த எப்பொருளுமாம் என்னும் பலவாந் தன்மையை ஏற்றியுரைக்கப்படுதலால் , இது பொருளவநுதியாயிற்று. இறைவனின் தனித்தன்மை ஒன்றாய் நிற்பதாகும் . உயிர்களிடத்துக் கலந்துள்ள தன்மையால் பலவாகியும் நிற்கின்றான் என்பது சைவசித்தாந்தத் துணிபாம் . இங்ஙனம் இறைவன் ஒன்றாகியும் , வேறாகியும் உடனாகியும் நிற்கும் திறமெல்லாம் ஞான நூல்களில் விரிவாகக் கூறப்படும் . ஆண்டுக் காண்க.


1. 'இயமானனுமாம் ' என்பதும் , 'உயிர்க்குயிராம் ' என்பதும் பாடங்களாகும்.