3. குணவவநுதி
எ -டு: 'மனுப்புவிமேல் வாழ மறைவளரக்கும் ஆரப்
பனித்தொடையல் பார்த்திபர்கோன் எங்கோன் - தனிக்கவிகை
தண்மை நிழற்றன்று தன்தொழுத பேதையர்க்கு
வெம்மை நிழற்றாய் மிகும் '
இ-ள்: மாந்தர் பூவுலகில் இனிது உயிர்வாழ வேதாகம நெறியை வளர்க்கும் தண்ணிய ஆத்திமாலையையுடைய அரசர்க்குக் கோமானாகிய எம் இறைவனான சோழராசனது தனிக்குடையானது தண்ணிய நிழலை யுடையதன்று ; அவனைக் கண்ட மடவார்க்கு மிக்க வெய்ய தன்மையைப் பண்ணாநிற்கும் எ - று.
தொடையல் - மாலை . பார்த்திபர் - அரசர் . தனிக் கவிகை - ஒற்றை வெண்கொற்றக் குடை.
வி-ரை: இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள் சோழனது வெண்கொற்றக் குடையாகும் .அதனிடத்து இயல்பாகவுள்ள குளிர்ந்த தன்மையை மறுத்து , வெம்மைத் தன்மையை ஏற்றி உரைத்திருத்தலின் , இது குண அவநுதி யாயிற்று. தண்மை , வெம்மை என்பன குணமாம்.
'அவநுதி ' என்னாது 'ஆகும் ' என்றதனால் இவ்வலங்காரம் பிற அலங்காரங்களோடு கூடி வருவனவுங் கொள்க.
வினைபற்றிய சிலேடை அவநுதி
எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'
இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.
இ-ள்: தேனைத் தன்னகத்தே கொண்ட மாலையை அணிந்த பெண்ணொருத்தியின் அழகைக் கவர்ந்துகொண்டு மீண்டும் அதனை அவட்குக் கொடுக்காத கொடுமையை உடைய அரசன் , பிறரை வஞ்சியாதானல்லன் (வஞ்சியைத் தலைநகராக உடைய சேரனல்லன்) , குலவொழுக்கத்தினின்றும் வழுவாமல் நின்று பெரிய ஐவகைத் தமிழ் நாட்டையும் பாதுகாத்து ஒழுகும் சோழன் ஆவன் என்பதாம்.
தமிழ்நாடு ஐந்து : சேரநாடு , சோழநாடு , பாண்டியநாடு , தொண்டைநாடு , ஈழநாடு.
'வஞ்சியா னல்லன் ' என்பதற்கு வஞ்சிப் பதியைத் தலைநகராக வுடைய சோழன் அல்லன் என்றும் , குலங்காவல் கொண்டொழுகும்