பக்கம் எண் :
 
148தண்டியலங்காரம்

கோவாக விளங்குபவன் பாண்டியன் என்றும் பொருளுரைப்பது அத்துணைப் பொருத்தம் உடைத்தன்று.

இப்பாடற்கண் சோழன் வஞ்சியாதவன் என்ற உண்மையை மறுத்து , வஞ்சிப்பவன் எனக் கூறுவதால் , இது அவநுதி யாயிற்று . 'வஞ்சியானல்லன் ' என்ற தொடர் இருபொருள் படுவதால் சிலேடையுமாயிற்று . இப்பாடலில் இத்தொடர் வினையாய் இருத்தலின் , இது வினைபற்றிய சிலேடை அவநுதி ஆயிற்று.

24. சிலேடையணி

75. ஓருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
1தெரிவுதர வருவது சிலேடை யாகும்.

எ-ன், நிறுத்த முறையானே சிலேடை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: ஒருவகையாய் முறையானே நின்ற தொடர்ச்சொல் பலபொருள்களது தன்மை தெரிய வருவது . சிலேடை என்னும் அலங்காரமாம் எ - று.

'சிலேடை' என்னாது 'ஆகும்' என்றதனால் , தொடர்ச் சொல்லேயன்றி ஒரு சொல்லே பலபொருட்பெற்றி தெரிவுதர வருவதும் அவ் வலங்காரமாம் என்க.

அதன் வகை

76. அதுவே
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.

எ-ன், அச்சிலேடையை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: அச்சிலேடை செம்மொழிச் சிலேடையும் , பிரிமொழிச் சிலேடையும் என இருவகைப்படும் எ - று.

அவற்றுள் , (1) செம்மொழிச்சிலேடை என்பது ஒருவகையாய் நின்று பலபொருள் படுவது.

எ - டு: 'செங்கரங்க ளானிரவு நீக்குந் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயிலப் - பொங்குதயத்(து)
ஓராழி வெய்யோன் உயர்ந்த நெறியொழுகும்
2நீராழி நீணிலத்து மேல் '

இ-ள்: சிவந்த கரங்களான் இருள் கடியுந் திறமை மிக்குத் தாமரை காதலிக்கும் வனப்புடைத்தாக மேல்நோக்கிய தோற்றத்தையுடைய ஒருகால் ஊர்திப் பகலோன் வான்நெறி ஒழுகுங் கடல் புவிமீது எனவும் ; சிவந்த கைகளான் உலகிலுள்ளோர் மிடி தீர்க்குந் தொழில் மிக்குத் திரு மடந்தை செல்வம் பெருக மேம்படா நின்ற பொருள் வருவாய் உடையானுமாய்த் தனிச்சக்கரத்தை உடையானுமாய் உலகில் உள்ளாரால் விரும்பப் படும் விசேட நெறியே ஒழுகுவான் கடல்சூழ்ந்த உலகத்து எனவும் வந்தவாறு காண்க.


1. 'தெரிதர வுரைப்பது' என்பதும் பாடம் .

2. 'நீராழி சூழ்ந்த நிலத்து ' என்பதும் பாடம் .