பக்கம் எண் :
 
பொருளணியியல்149

இஃது ஆதித்தனுக்கும் சோழனுக்கும் சிலேடை ஆதித்தன்மேல் செல்லுங்கால் :- கரம் - கதிர். இரவு - இருள். நீக்கல் - கடிதல் . பங்கயம் - தாமரை . மாதர் - காதல் . நலம் - அழகு . பயிலல் - உண்டாதல் . பொங்குதல் - மேல் நோக்கி வளர்தல் . உதயம் - தோற்றம். ஓராழி - தேரின் தனிக்கால் . வெய்யோன் - ஆதித்தன் . உயர்ந்த நெறி - ஆகாயம். சோழன்மேல் செல்லுங்கால் :- கரம் -கை . இரவு - மிடி . நீக்கல் - தீர்த்தல் . பங்கயமாதர் - திருமடந்தை . நலம் - செல்வம். பயிலல் - பெருகுதல் . பொங்குதல் - மேம்படுதல் . உதயம் - பொருள் வருவாய். ஓராழி - தனிச்சக்கரம். வெய்யோன் - விருப்பமுடையோன் . உயர்ந்த நெறி - சான்றோரால் புகழப்படும் வழி. நெறி என்றது , ஈண்டு ஒழுக்கம்.

வி-ரை: இப்பாடலிலுள்ள தொடர்கள் சூரியன் , சோழன் ஆகிய இருவருக்கும் பொருந்துவதா யிருப்பதால் சிலேடை யாயிற்று. இத்தொடர்கள் சூரியன் சோழன் ஆகிய இருவர்க்கும் ஒரே நிலையில் ( செம்மையாகப்) பிரிந்து பொருள்படுதலால் செம்மொழிச் சிலேடையு மாயிற்று.

செம்மொழி - செம்மையான மொழி . சொற்கள் ஒவ்வொரு பொருள் படும் பொழுதும் பிரிவதில் மாறுபடுதலின்றி, ஒரே நிலையில் பிரிந்து பொருள்படின் அதனைச் செம்மொழி என்பர்.

(2) பிரிமொழிச்சிலேடை என்பது ஒருவகையாய் நின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்துப் பல பொருளாகக் கொள்வது.

எ - டு :'தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா வரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம்
சிந்துந் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்
நந்துந் தொழில்புரிந்தார் நாடு '

இ-ள்: அழகு கெடாத நிலங்களில் உண்டாய பகட்டேர் பெரிய தாமரையைப் பொருந்தவும் , இகழப்படாத நெற்சூட்டை உழவர் திரட்டவும், அத்தாமரை மலரில் உண்டாகிய தேன்பொழியும் பெருமையை உடைத்து , எம்கோமானாகிய சோழனுடைய திருவுள்ளம் சிறக்கும்வகை ஒழுகினோர் நாடு எனவும் ; அசையாத விடத்தேர் என்னும் மரமுடைத்தாய்ப் பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மரைகளை உடைத்தாய் இகழப்படாத சிங்கப் போத்துக்கள் துன்பமுறுத்தவும் பட்டு நல்லோர் உள்ளங்களில் வாழும் நாடுகள் எல்லாம் அழிவுபடுந் தன்மையை உடைத்தாம் , எம்கோமானாகிய சோழன் திருவுள்ளம் வேறுபடுந் தொழில் பயின்றார் வாழும் நாடு எனவும் வந்தவாறு காண்க.

இது சோழனுடைய மனம் களிக்கும்படி நடந்தோருடைய நாட்டிற்கும் , அவன் மனம் வெறுக்கும்படி நடந்தோருடைய நாட்டிற்கும் சிலேடை.

சோழன் பகையாகாதார் நாட்டின்மேல் செல்லுங்கால் : - தள்ளா இடம் - அழகு கெடாத நிலம் . ஏர் - உழவு எருது. தடந்தாமரை - பெரிய தாமரை . 'தடத்தாமரை ' தடந்தாமரை என மெலிந்தது. அடைதல் - பெருந்துதல் . எள்ளாத - இகழாத . அரி - நெற்சூடு.