பக்கம் எண் :
 
பொருளணியியல்151

இது விநாயகருக்கும் மலைக்கும் சிலேடை, வி நா ய க ர் மே ல் செல்லுங்கால் ;- பொன் - பொலிவு. பணை - பருத்தல். முகம் - வதனம், கோடு - மருப்பு. நாகம் - யானை. வம்பு - கச்சு. உறுதல் - கட்டுதல். ஓடை - பட்டம். மலர்தல் - பரத்தல். உம்பர் - முடி. இன்பம் - இந்திரபதம் முதலாய போகம். மலைமேல் செல்லுங்கால்;- பொன்-கனகம், பணை-மூங்கில். முகம் - பக்கம் . கோடு - சிகரம். நாகம் - மலை. வம்பு - மணம். உறுதல் - உண்டாதல். ஓடை - வாவி ; ஒரு மரமுமாம். மலர்தல் - பூத்தல். உம்பர் - மேல். இன்பம் - தவத்தொழில் புரிவார்க்கு அவர் வேண்டிய உணவுகளும் தண்ணீருமாகிய பலவகைப்பட்ட பண்டங்கள்.

இப்பாட்டினுள் 'நவம் புரியும் வானதியும் நாண்மதியும் நண்ணத் தவம் புரிவார்க்கு' என்பதன் பொருள், இரண்டு தலைக்கும் ஒக்கும்.

வி-ரை: இப்பாடலிலுள்ள தொடர்கள் விநாயகர், மலை ஆகிய இரு பொருள்களுக்கும் பொருந்தி, இறுதியில் ' இன்பம் தரும் , என்னும் ஒரு வினையால் முடிந்திருப்பதால், இது ஒருவினைச் சிலேடையாயிற்று.

(2) பலவினைச்சிலேடை என்பது பலவினையால் வருவது.

எ-டு ; 'தவிரா மதுவுண் களிதளிர்ப்ப நீண்டு
செவிமருவிச் செந்நீர்மை தாங்கிக் - குயிலிசையும்
மின்னுயிரா நுண்ணிமையார் மென்னோக்கு மேவலார்
இன்னுயிரை யீர்க்கின் றன '

(இ-ள்) இடைவிடாமல் நறவுண்ண வந்த களிப்பு உண்டாக நீண்டு செவியுட் புகுந்து நிறைந்து கோடாத நீர்மையவாகியிருக்கப்பட்ட குயில் குரல் பிரிந்தோர் உயிர்களை வருத்தம் செய்யா நின்றன எனவும் ; விடுதற்கு அரிதாகிய கள்ளை யுண்ட மயக்கத்தாலே தழைத்து நீண்டு செவியளவுஞ் சென்று சிவந்த குளிர்ச்சியினை யுடையவாகிய மின்னை யொத்த சிறு மருங்குலினையுடையார் மெல்லியவாகிய கண்கள் தம்மைப் புணரும் தலைவருடைய இனிய உயிரை நலியா நின்றன எனவும் கொள்க.

இது குயில்குரலுக்கும் மடவார் கண்ணுக்கும் சிலேடை. குயில்குரல் மேல் செல்லுங்கால் ;- மது - தேன். செவிமருவி - செவியுட்புக்கு. செந்நீர்மை - கோடாத தன்மை. மேவலார் - பிரிந்தார். இன் - சாரியை. கண்ணின்மேல் செல்லுங்கால் ;- மது - கள். செவி மருவி - செவியளவுஞ் சென்று. செந்நீர்மை - சிவந்த குளிர்ச்சி. மேவலார் - புணருந் தலைவர். இன்னுயிர் - இனிய உயிர்.

வி-ரை: இப்பாடலிலுள்ள தொடர்கள் குயிலின் குரல், பெண்களின் கண்கள் ஆகிய இரண்டற்கும் பொருந்தி, அவையிரண்டும் இடையிடையே நீண்டு, மருவி, தாங்கி, ஈர்க்கின்றன என்ற பல வினைகளோடும் இயைந்து பொருள்படுவதால், இது பலவினைச் சிலேடையாயிற்று.

(3) முரண்வினைச்சிலேடை என்பது மாறுபட்ட வினையால் வருவது.