எ-டு: 'மாலை மருவி மதிதிரிய மாமணஞ்செய்
காலைத் துணைமேவ லார்கடிய - வேலைமிசை
மிக்கார் கலியடங்கா தார்க்கும் வியன்பொழில்கள்
புக்கார் கலியடங்கும்புள்.
இ-ள்: மயக்கத்தை மருவிக் கருத்து வேறுபடமிகவும் மணங்கமழும் காலத்து தந்துணைவரைப் பொருந்தாதார் அஞ்சக் கரைமீது மிக்குக் கடல் பொங்கி ஆர்க்கும், அகன்ற பொழில்கள் புக்கு ஒலியடங்கும் பறவைகள் எனவும்; அந்திப்பொழுது மருவித் திங்கள் உலாவ மிக்கிருந்த கூட்டம் புரியுங்காலத்துத் தந்துணைவரைப் பொருந்தினார் விளங்க எனவும் கொள்க; பின்பு ஒரு தன்மை எனக் கொள்க.
இது பிரிந்தார்க்கும் புணர்ந்தார்க்கும் சிலேடை. பிரிந்தார்மேல் செல்லுங்கால் ;- மால் - மயக்கம். மதி - கருத்து. திரிதல் - வேறு படுதல். - மணம்-வாசம். துணைமேவலார் - தம் துணைவரைப் பிரித்தார். கடிய- அஞ்ச. புணர்ந்தார்மேல் செல்லுங்கால் :- மாலை- அந்திப் பொழுது மதி - திங்கள். திரிதல்- உலாவல். மனம்- கூட்டம். துணைமேவலார் துணைவரைப் புணர்ந்தார். கடிய-விளங்க.
வி-ரை: இப்பாடலிலுள்ள தொடர்கள் துணைவரைப் பிரிந்தார்க்கும், புணர்ந்தார்க்கும் பொருந்தி, ஆர்க்கும் அடங்கும் என்ற முரண்பட்ட வினைகளோடு இயைந்து பொருள்படுவதால், இது முரண்வினைச் சிலேடையாயிற்று.
(4) நியமச்சிலேடை என்பது சிலேடித்தவற்றை நியமஞ் செய்வது.
எ-டு: 'வெண்ணீர்மை தாங்குவன முத்தே வெறியவாய்க்
கண்ணீர்மை சோர்வ கடிபொழிலே - பண்ணீர்மை
மென்கோல யாழே யிரங்குவன வேல்வேந்தே.!
நின்கோல் உலாவு நிலத்து'.
இ-ள்: வெற்றியையுடைய வேல் வேந்தனே! நின் செங்கோல் உலாவும் உலகத்து வெண்மை நிறத்தை உடைத்தாய் இருப்பன முத்தே எனவும், விரை நாற்றத்தை உடைத்தாய் மதுச் சோர நிற்பன பெரிய பொழிலே எனவும், குளிர்ந்த ஒசையை உடைத்தாய் அழகோடு கூடி மெல்லிதாய்ப் பிறர்க்கு மனக் குழைவு கொடுப்பன யாழே எனவும் கிடந்தமையால், எண்ணப்பட்ட இவையொழிய அறிவின்மை தாங்குவதும், மிடியை யுடைமையால் கண்ணீர் சொரிவதும், பிறர் மனம் தளர்வதும் இல்லை எனக் கிடந்தவாறு கண்டு கொள்க.
வெண்ணீர்மை - வெண்ணிறமும், அறியாமையும் வெறியவாதல்-வாசம் உடையனவாதலும். வெறுமை உடையனவாதலும். கண்ணீர்மை கள்ளாகிய நீரும், கண்ணின் நீரும்.
வி-ரை: பல பொருள்களுக்கு இயையுமாறு சொற்களையும் சொற்றொடர்களையும் அமைத்து, அப்பொருள்களுள் சிலேடித்த பொருளாகிய ஒன்றற்கே தேற்றேகாரம் கொடுத்து வரையறைப் படுத்தி உரைப்பது இதன் இலக்கணமாகும்,