இப்பாடற்கண் இருவகை நிதரிசனம் உள்ளன .(1) கதிரவனின் ஒளியைக் கண்டு தாமரை மலர்வதானது பிறர்செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்வர் என்பதைக் காட்டுகின்றது . இங்ஙனம் ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு அதன் பயனாக நன்மையான கருத்துப் பெறப்பட்டதாகக் கூறுவது. புகழ்மை நிதரிசனமாகும் . (2) கதிரவனின் ஒளியைக் கண்டு ஆம்பல் குவிதலானது , பிறர் செல்வத்தைக் கண்டால்சிறியோர் பொறார் என்பதைக் காட்டுகின்றது . இந்நிகழ்ச்சியைக் கொண்டு இதன் பயனாகத் தீமை புலப்படக் கூறுதலின் , இது தீமை நிதரிசன மாயிற்று.
இப்பாடல் புகழ்மை தீமை என்ற இரண்டற்கும் எடுத்துக்காட்டா மேனும் , ஆசிரியர் புகழ்மைக்காக இப்பாடலைக் எடுத்துக் காட்டியிருத்தலின் , இவ்விரண்டனுள் முன்னையது ஒன்றமே கருத்தாகக் கொள்க.
2. தீமை
எ-டு: ' பெரியோ ருழையும் பிழைசிறிதுண் டாயின்
இருநிலத்துள் யாரும் அறிதல் - தெரிவிக்கும்
தேக்கும் கடலுலகில் யாவர்க்குந் தெள்ளமுதம்
வாக்கு மதிமேல் மறு '
இ-ள்: மதியத்தின் மீது உண்டாகிய மறு, பூமிக்கண் உண்டாகிய பெரியோரிடத்துக் குற்றங்கள் மறைத்தற்கு அரிதாய் யாவர்க்கும் புலப்படும் என்பது தெரியச் சொல்லுவது போல் இருந்தது எ -று.
உழை - இடம் . இருநிலம் - பெரிய நிலம் . தெரிவித்தல் - தெரியக் காட்டுதல் . தெள்ளமுதம் - தெள்ளிய அமுதம் .வாக்குதல் - ஒழுக்குதல் . இது தீப்பொருட் காட்சி
வி-ரை: இப்பாடற்கண் மதியத்தில் உள்ள மறு யாவர்க்கும் தெரியும் என்ற நிகழ்ச்சியைக் கொண்டு , மிகப் பெரியோரிடத்தும் தவறு சிறிது ஏற்படின் அதனை எல்லோரும் அறிவர் என்ற தீமைப் பயனைக் கூறலின் , தீமை நிதரிசனமாயிற்று. இப்பாடல்,
'குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து '
-குறள் . 957
என்னும் திருக்குறளின் கருத்தை முகந்து எழுந்ததாகும்.
நிதரிசனம் - நன்கு காண்பது . நிதரிசன அணியைத் தமிழ் நூலார் ' காட்சியணி ' என்பர்.
31. புணர்நிலையணி
85. வினைபண் பெனஇவை இருபொருட்(கு) ஒன்றே
புணர மொழிவது புணர்நிலை யாகும்.
எ-ன், நிறுத்த முறையானே புணர்நிலை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: வினையானும் பண்பானும் இரண்டு பொருளுக்கு ஒன்றே பொருந்தச் சொல்லுவது புணர்நிலை என்னும் அலங்காரமாம் எ - று.