நம் மெல்லென் சாயல் தளராமல் தாங்குமால் ' என எந்தத் தலைவன் புகழ்வது போலக் கூறப்பட்டானோ, அந்தத் தலைவனே ஆண்மையும் இன்புச்செறிவும் அற்றவன் எனப் பழிக்கப்படுதல் காண்க.
மாறுபடு புகழ்நிலை, ஒன்றனைப் புகழ ஒன்றற்குப் பழிப்பாய்த் தோன்றுவது. 'இரவறியா' என்று தொடங்கும் பாடலில், மானைப் புகழ, அது இரவலர்க்குப் பழிப்பாய்த் தோன்றல் காண்க.
இங்ஙனம் வேறுபாடு கூறிய உரையாசிரியர் 'அல்லதூஉம் அவையிரண்டும் ' என்று தொடங்கும் பகுதியில் ஒன்றாகக் கருதினும் அமையும் என்னும் கருத்தினராய் எழுதுகின்றார். அவர் கருத்து வருமாறு ;- பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தலும், புகழாப் புகழ்ச்சியும் ஒன்றே. புகழ்வதுபோலப் பழித்திறம் புனைதலும், மாறுபடு புகழ் நிலையும் ஒன்றே. ஆயினும் இவற்றை இலேச அணியிடத்தும் ஈண்டும் கூறியதற்குக் காரணம். இவ்வகைகளைத் (அதாவது புகழாப் புகழ்ச்சி, மாறுபடு புகழ்நிலை) தனித்துக் கூறாது. இலேச அணியின் வகையாகக் கூறுவாரும் உண்டு என்பதை அறிவிக்க முன்னரும், ஒரு சில ஆசிரியர்கள் இவற்றைத் தனியாகவும் கொள்வர் என்பதை அறிவிக்க ஈண்டு வேறு வேறாகத் தனித்தும் கூறப்பட்டனவாம் என்பது.
(37)
30 . நிதரிசனவணி
84.ஒருவகை நிகழ்வதற்(கு) ஓத்தபயன் பிறிதிற்குப்
புகழ்மை தீமை யென்றிவை புலப்பட
நிகழ்வ தாயின் நிதரிசன மதுவே.
எ-ன் , நிறுத்த முறையானே நிதரிசனம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ஒருவகையான் நிகழ்வது ஒன்றற்குப் பொருந்தியதொரு பயனைப் பிறிதொன்றற்கு நன்மை புலப்பட நிகழ்வதாதல், தீமை புலப்பட நிகழ்வதாதல், செய்வதெனச் சொல்லுவது நிதரிசனம் என்னும் அலங்காரமாம் எ - று .
அவற்றுள்,
1 . புகழ்மை
எ-டு ; 'பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும்
சிறியோர் பொறாத திறமும் - அறிவுறீஇச்
செங்கமல மெய்மலர்ந்த தேங்குமுத 1மெய்யயர்ந்த
பொங்கொளியோன் வீறெய்தும் போது '
பொங்கொளியோன் - ஆதித்தன். வீறெய்தல் - கதிர் விரித்தல். இது நற்பொருட் காட்சி.
வி-ரை, இ-ள் ; பிறர்தம் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்வதையும், சிறியோர் அதற்குப் பொறாமை கொள்வதையும் அறிவுறுத்த. மிகுந்த ஒளியுடைய கதிரவன் தோன்றும்பொழுது செந்தாமரை மலர்கள் நெகிழ்வுற்று மலர்ச்சியடைந்தன ; தேன் நிரம்பிய ஆம்பல் மலர்கள் குவிந்தன என்பதாம்.
1. 'மெய்பசந்த' என்பதும் பாடம்