பக்கம் எண் :
 
பொருளணியியல்167

வேற்றுமைக்குரிய உடனிகழ்ச்சிப் பொருள்பட நிற்க, அவையிரண்டும் ஒரு சொல்லால் முடியுமாறு இருப்பின் அ து வே புணர்நிலையாம் என்று கருத்தாகக் கொள்ள வேண்டும் என்பதாம்.

இங்குக் கூறப்பட்ட இரு பாடல்களிலும் முறையே ' முகிலுடனே கண் நீர்பொழிந்த ' என்றும், 'மாலைப்போழ்துடனே தமியார் உயிர் நீண்டன ' என்றும் இருபொருள்களும் உடனிகழ்ச்சிப் பொருளில் நின்று ஒரு சொல்லால் முடித்திருப்பது காண்க.


32. பரிவருத்தனையணி

86. பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே.

எ-ன் , நிறுத்த முறையானே பரிவருத்தனை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) பொருள்கள் ஒன்றற்கு ஒன்று கொடுத்து, ஒன்று கொண்டன வாகச் சொல்லுவது பரிவருத்தனை என்னும் அலங்காரமாம் எ - று .

எ-டு ; 'காமனை வென்றோன் சடைமதியும் கங்கையும்
தாம நிழலொன்று தாங்கொடுத்து - நாமப்
பருவா ளரவின் பணமணிகள் தோறும்
உருவா யிரம்பெற் றுள '

(இ-ள்) காமனை வென்ற முக்கட் கடவுளுடைய சடைமீது உண்டாகிய மதியும், கங்கையும், வருத்தம் செய்யும் தன்மை உடைத்தாய்ப் பெரிதாய் இருக்கப்பட்ட ஒளியினை யுடைத்தாய் அங்கேயிருந்த அரவின் படங்களில் உண்டாகிய மணிகள் தோறும் தத்தம் உருவத்தைக் கொடுத்து, ஆயிரமாயிரம் உருவத்தைப் பெற்றன எ -று .

வி-ரை: சிவபெருமான் தலைமீதுள்ள கங்கையும் மதியும், அரவின் மணிகளுக்கு முன்னே தாந்தாம் கொடுத்த நிழல் ஒவ்வொன்றே எனினும் அரவின் மணிகள்தோறும் அவ்வொவ்வொரு உருவமும் ஆயிரம் ஆயிரமாகக் காட்சியளித்தன என்று கூறப்படுகின்றது. இங்ஙனம் கொடுத்தது ஒன்றாய்க், கொண்டது ஆயிரமாய்ப் பரிமறிக்கொண்டிருத்தலின், இது பரிவருத்தனையாயிற்று.

பரிவருத்தனை - ஒன்றைக் கொடுத்து வேறொன்றை வாங்குதல். இப்பாடற்கண் கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய்ப் பரிவருத்தனை செய்யப்பட்டுள்ளது.

' சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து '

- குறள் - 1183

என்னும் திருக்குறளில் கொள்வதும் மிகை கொளாது , கொடுப்பதும் குறை கொடாது சமமாய்ப் பரிவருத்தனை செய்யப் பெற்றிருத்தல் அறிந்து இன்புறற் குரியது. பிறவும் தம்போற் பேணிச் செய்வதே வாணிகம் என அறிவுறுத்திய பெரியவர் திருவள்ளுவர் ஆதலின், தாம் கூறும் அணியிலும் அகவாழ்விலும் கூட அந்நெறியைக் கடைப்பிடித்துள்ளார் என்பதை நினையுந்தொறும் பெருமிதமும் மகிழ்வும் ஏற்படுகின்றன.