பக்கம் எண் :
 
168தண்டியலங்காரம்

33. வாழ்த்தணி

87. இன்னார்க்(கு) இன்ன(து) இயைக வென்றுதாம்
முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப .

61

எ-ன் , நிறுத்த முறையானே வாழ்த்து என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று .

இ-ள்: இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவிகள் தாம் கருதியதனை விதிப்பது , வாழ்த்து என்னும் அலங்காரம் என்று சொல்லுவர் புலவர் எ-று .

எ-டு : 'மூவாத் தமிழ்பயந்த முன்னூல் முனிவாழி !
ஆவாழி ! வாழி அருமறையோர் ! - காவிரிநாட்(டு)
அண்ணல் அணபாயன் வாழி ! அவன்குடைக்கீழ்
மண்ணுலகில் வாழி மழை '

முன்னூல் முனி - அகத்தியன் .

வி-ரை: அழியாத தமிழைத்தோற்றுவித்த பழைய நூல்களையுணர்ந்த அகத்திய முனிவன் வாழ்க ; ஆனிரைகள் வாழ்க ; அரிய வேதங்களை யுணர்ந்த அந்தணர்கள் வாழ்க ; காவிரி சூழ்ந்த சோழ நாட்டின் தலைவனான அனபாயன் வாழ்க ; அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நிலவுலகில் மழையானது என்றும் பொய்யாது வாழ்க என்பதாம் .

இப்பாடற்கண் அனபாயனுக்கும் அவனுடைய நாட்டிற்கும் இன்றியமையாதனவாயுள்ள மொழி , மழை , சான்றோர்கள் ஆகிய அனைத்தும் வாழ்க என வாழ்த்தியுள்ளமையின் , இது வாழ்த்தணியாயிற்று .

முன்னியது - கருதியது ; 'முன்னியவள் நமக்குமுன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழை யேலோர் எம்பாவாய் ' என்றவிடத்தும் இது இப்பொருள்படுதல் காண்க .

34. சங்கீரணவணி

88. மொழியப் பட்ட அணிபல தம்முள்
1தழுவ வுரைப்பது சங்கீ ரணமே .

62

எ-ன் , நிறுத்த முறையானே சங்கீரணம் என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று .

இ-ள்: மேற் சொல்லப்பட்ட அலங்காரங்கள் பலவும் தம்முள் பொருந்த உரைப்பது சங்கீரணம் என்னும் அலங்காரமாம் எ-று .

எ-டு : 'தண்டுறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு
புண்டரிகம் நின்வதனம் போன்றதால் - உண்டோ !
பயின்றார் உளம்பருகும் பால்மொழியாய் ! பார்மேல்
முயன்றால் முடியாப் பொருள் '

இ-ள்: குளிர்ந்த துறைநீரிலே தவம் புரிந்த இதனாலே வண்டு மருவப்பட்ட தாமரை நின் முகமண்டலத்தை ஒப்பப் பெறுதலால் , அணைந்தார் உள்ளத்தை வவ்வும் பால் போன்ற மொழியினை உடையாய் ! உலகத்தில் முயற்சியால் முடியாத பொருள் யாதுமில்லை எ-று .


1. 'தழுவ வைப்பது' என்பதும் பாடம் .