பக்கம் எண் :
 
246தண்டியலங்காரம்

(4) உலக மலைவமைதி

எ - டு :

'கடல்நான்கும் வந்தலைக்குங் காலாளும்தேரும்
அடல் செய்(து) இருதுணியா யிற்றே - உடலொன்றி
அந்தரமே யேகுவன காண்மினோ யானியற்றும்
இந்திர சாலம் இது'

இ - ள் : நான்கு கடலையும் வந்தலைக்கின்ற காலாட் படையும் தேர்ப்படையும் போர் செய்து இருகூறாயின; அவை தேகத்தோடு சேர்ந்து ஆகாயத்தே செல்வதைப் பாருங்கள்; இது யான் செய்யும் இந்திரசாலம் எ - று.

இதனுள், உலகமலைவாய்ப் பொருள்வந்து, இந்திரசாலம் என்றதனால் அலங்காரமாயிற்று.

(5) நியாய மலைவமைதி

எ - டு :

'வானாகி மண்ணாய் மறிகடலாய் மாருதமாய்த்
தேனாகிப் பாலாந் திருமாலே! - ஆனாயா!
வெண்ணெய் விழுங்க நிறையுமோ மேலொருநாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு'

இ - ள் : விண்ணாகி, மண்ணாகி அலைகளால் மடக்குகின்ற கடலாகிக், காற்றாகித், தேனாகிப், பாலுமாகும் இலக்குமியை மார்பில் தரித்த மாலே! பசுக்களைக்காத்த இடையனே! முன் ஒரு நாள் மண்ணை உமிழ்ந்த உன்னுடைய வயிறானது, இப்பொழுது வெண்ணெயை விழுங்குவதால் நிறைவுறுமோ? எ - று.

இதனுள், அனைத்துப் பொருளும் ஆனாய் என்றும், வெண்ணெயை விழுங்கினாய் என்றும், மண்ணை உமிழ்ந்தாய் என்றும் மாறுபடக் கூறினமையின், நியாயமலைவாய்ப் புனைந்துரையால் அலங்காரமாயிற்று.

 (6) ஆகம மலைவமைதி

எ - டு :

'காய்கதி ரோனுக்குக் கன்னனையீன் றுங்கன்னி
ஆகிப்பின் மூவரையும் ஈன்றளித்த - தோகை
தலைமைசேர் கற்பினாள் தாள்வணங்கும் முன்னாள்
மலையெடுத்துக் கார்காத்த மால்'

இ - ள் : வெப்பத்தைச் செய்கின்ற சூரியனுக்கு முன்னே கன்னனைப் பெற்றும் கன்னியாகிப் பின்னர், தருமர், வீமன், அருச்சுனன் ஆகிய மூவரையும் யமன், வாயு, இந்திரன் ஆகிய மூன்று தேவர்களுக்கும் பெற்ற மயில் போன்ற சாயலை யுடையவளும், முதன்மையான கற்பினையுடையவளும் ஆகிய குந்தியின் தாளை வணங்கினன், முன்னாளிலே கோவர்த்தனகிரியை எடுத்து மழையைத் தாங்கி ஆயரைக் காத்த திருமால் எ - று.

இதனுள், சூரியனுக்குக் கன்னனைப் பெற்றுப் பின்னரும் கன்னியாயினாள் என்றும், அதன்பின் மூவரையும் பெற்றாள் என்றும், இவள் கற்புடைமையால் திருமால் வணங்கினான் என்றும் கூறினமையின், ஆகமவழுவாய் அவ்வாறு சொல்லுதல் தகுதியாதலின் அலங்காரமாயிற்று.

(34)