பக்கம் எண் :
 
சொல்லணியியல்245

இ - ள் : அகிற்கட்டைகளைத் தாங்கிச், சிறந்த சந்தனக் கிளைகளையும் அலையினால் அசைத்துக்கொண்டுவரும் காவிரியாறானது, பச்சை யிரத்தினத்தின் சோதியுடனே, செம்மணியின் பிரகாசத்தையும் இரண்டு பக்கத்திலும் சேர்ந்து, அவ்விருநிறத்தையும் கொண்ட உமைபாகனாகிய சிவபெருமானுடைய வடிவத்தையும் குறைவுறச் செய்யும் எ - று.

இதனுள், காவிரியாறு தன்னுள் பிறமலைக்கும், பிற நாட்டிற்கும் உரிய மரகதமும், மாணிக்கமும், சந்தனமும் அலைத்து வருகின்றது என்றமையான், இடமலைவாய்ப் புகழ்ச்சி யிடத்துப் பொருந்துவதால் அலங்காரமாயிற்று.

(2) கால மலைவமைதி

எ - டு :

'மண்டபத்து மாணிக்கச் சோதியான் வாவிவாய்ப்
புண்டரிக மாலைப் பொழுதலரும் - தண்டரளத்
தாமஞ் சொரியுந் தகைநிலவால் மெல்லாம்பற்
பூவலரும் காலைப் பொழுது'

இ - ள் : மண்டபத்திலுள்ள செம்மணியின் சூரியப்பிரகாசம் போன்ற சோதியினாலே, தடாகத்தினிடத்திலே தாமரையானது மாலைநேரத்திலும் மலரும்; சந்திரப்பிரகாசத்தை நிகர்த்த குளிர்ந்த முத்துமாலை பொழிகின்ற நற்றகுதி வாய்ந்த நிலவினாலே மெல்லிய ஆம்பல் மலரானது காலை நேரத்திலும் மலரும் எ - று.

இதனுள், காலை மலருங் கமலம் மாலை மலர்ந்ததாகவும், மாலை மலரும் ஆம்பல் காலைமலர்ந்ததாகவும் கூறினமையின் கால மலைவாய்ப் புனைந்துரையிடத்துப் பொருந்துவதால் அலங்காரமாயிற்று.

(1) கலை மலைவமைதி

எ - டு :

'கூடம் விரவிக் குறைநிலத்தா னத்தியன்ற
பாட லமுதம் பருகினான் - ஆடுகின்ற
ஊசலயல் தோன்றி யொளியிழைக்கு நாணளித்த
ஆசில் வடிவே லவன்'

இ - ள் : ஆடுகின்ற ஊஞ்சலின் பக்கத்திலே தோன்றி, பிரகாசம் பொருந்திய ஆபரணங்களை யணிந்த பெண்ணிற்கு, நாணத்தைக் கொடுத்த குற்றமற்ற கூர்மை தங்கிய வேலாயுதத்தை யுடையவன், ஆறாம் நரம்பாகிய பகை நரம்போடு கூடிக் குறைநிலத் தானத்தான் இயன்ற பாடலாகிய அமுதத்தைப் பருகினான் எ - று.

இதனுள், ஆறாம் நரம்பாகிய பகையதனோடு, கூடிக் 1குறைநிலத் தானத்தான் இயன்றதனைப் 'பாடலமுதம்' என்றமையின், கலைமலைவாய்ப் புனைந்துரைத்தமையின் அலங்காரமாயிற்று.


1. குறைநிலத்தானம் - குறைபாடுடைய ஸ்வர விஸ்தார முறை.