(6) ஆகம மலைவு 123. | ஆகமம் என்பன மநுமுத லாகிய | | அறனொடு புணர்ந்த திறனறி நூலே. |
எ - ன், ஆகமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் : ஆகமம் என்று சொல்லப்படுவன, மநுமுதலாகப் பதினெண் வகையவாய் அறத்தொடு பொருந்திய திறத்தை அறிவிக்கும் நூல்களாம் எ - று. அவற்றின் மலைவாவது, இந்நூல் இன்னது செய்தல் அறமென்று விதிக்கப்பட்ட விதியிற் பிறழ வருவது. எ - டு : | 'தெய்வம் விருந்தொக்கல் தென்புலத்தார் தாமென்னும் | | ஐவகையுந் தம்பொருள்கொண் டாற்றுவார் - மையிலா | | முக்கோலும் கல்தோய் முழுமடியும் தாங்கியே | | தக்கோர் எனப்படுவார் தாம்' |
இ - ள் : குற்றமற்ற திரிதண்டமும், காவியில் தோய்த்த முழுவஸ்திரமும் தரித்துப் பெரியோர் எனப்பட்ட சந்நியாசிகள், தேவர், விருந்தினர், சுற்றத்தார், பிதிரர், தாங்கள் என்னும் ஐவகையாரையும், தாங்கள் சம்பாதித்த பொருளைக் கொண்டே காப்பாற்றுவார்கள் எ - று. இதனுள், இல்வாழ்வார்க்குரிய தொழிலைத், துறவு புரிந்தோரோடு புணர்த்தமையின் ஆகம மலைவு ஆயிற்று. (வி - ரை) பதினெட்டு வகையான அறநூல்களாவன :- மநு, அத்திரி, விஷ்ணு, வாசிட்டம், யமம், ஆபஸ்தம்பம், யாஜ்ஞவல்க்யம், பராசரம், ஆங்கீரசம், உசனம், காத்தியாயனம், சம்வர்த்தம், வியாசம், பிரகஸ்பதி, சங்கலிதம், சாதாதபம், கௌதமம், தக்கம் என்பன. (33) இடமலைவு முதலியவற்றிற்குச் சிறப்பு விதி 124. | கூறிய நெறியின் ஆறுவகை மலைவும் | | நாடக வழக்கில் நாட்டுதற் குரிய. |
எ - ன், இது மேற்கூறிய ஆறுவகை மலைவிற்கும் ஆவதோர் அமைதி கூறுகின்றது. இ - ள் : மேற்கூறிய வழு ஒன்பதும், இவ்வகையால் புணர்ப்பின் ஆம் என்றமையான், அதுபோல இச்சொல்லப்பட்ட அறுவகை மலைவும் நாடகவழக்கில் சொல்லுதற்கு உரிய எ - று. நாடக வழக்கும், உலகியல் வழக்கும், பாடல்சான்ற புலனெறி வழக்கும் என்னும் மூன்று வழக்கினுள், நாடக வழக்காவது; இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்துரையாகத் தோன்றுவது. எனவே, அவ்வாறு மலைவும் புகழ்ச்சியிடத்து நீக்கப்படாது அலங்காரமாகியே வரும் என்பதாம். (1) இட மலைவமைதி எ - டு : | 'மரகதச் சோதியுடன் மாணிக்கச் சோதி | | இருமருங்குஞ் சேர்ந்தரிவை பாகன் - உருவம் | | அலைக்கும் அகில்சுமந்(து) ஆரத்து வான்கோ(டு) | | அலைத்து வரும்பொன்னி யாறு' |
|