மதயானையைச் செலுத்தி, பகைவர்களைப் பொடியாக்கி, இந்தப் பூமி முழுவதையும் நீண்ட தனது கொற்றக்குடை நிழலின் கண்ணே தங்கும்படி செய்தான் எ - று. தூர்த்தல் - வேறு பொருள்களை இட்டு நிரப்பி மேடாக்குதல். இதனுள், ஒரு நில வேந்தனை எழுகடலும் தூர்த்தானாகவும், ஆகாயத்தே தன் யானையைச் செலுத்திப் பகைவரை வென்றானாகவும், உலக ஒழுக்கோடு மாறுபடக் கூறினமையின், உலக மலைவு ஆயிற்று. (31) (5) நியாய மலைவு 122. | நியாயம் என்பது நெறியுறக் கிளக்கின் | | அளவையில் தெளிக்கும் விளைபொருள் திறமே |
எ - ன், நியாயம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் : நியாயம் என்பதனை இலக்கணவகையால் கூறுங்கால், காண்டல் முதலிய அளவையால் பொருள் விளையும் திறத்தைத் தெளிவிப்பது எ - று. அது, அறுவகைப்பட்ட சமயத்தோரும் உலகத்தில் பொருள்களது தோற்றமும், நிலையும், அழிவும் இன்ன வகைய என்று கூறுதல். அவற்றின் மலைவாவது, அவற்றை அவ்வவர் கூறியவாறு கூறாது மாறுபடக் கூறல். எ - டு : | 'ஆய பொருள்கள் கணந்தோ றழியுமெனத் | | தூய அசோகின் முனியுரைத்த(து) - ஆய்வன்றே | | காதலர் நீங்க எழுங்காம வெங்கனல்வாய் | | மாதர் உயிர் தாங்கு மாறு' |
இ - ள் : உலகத்தில் தோன்றிய பொருள்கள் எல்லாம், ஒவ்வொரு கணத்திலும் அழிந்துபோம் என்று, பரிசுத்தமாகிய அசோகமரத்தின் அடியில் எழுந்தருளி இருக்கின்ற முனிவனாகிய அருகன் சொன்னது, நல்ல ஆராய்ச்சியை உடையதன்று; ஏனெனில், தம் காதலர் பிரிய, அதனால் உண்டாகின்ற வெப்பமாகிய ஆசைக் கனலினிடத்தே அகப்பட்டு மாதர் உயிரைத் தாங்கியிருக்கும் வீரத்தால் எ - று. இதனுள், தோன்றும் பொருள்கள் எல்லாம் கணந்தோறும் அழியும் எனப் போதிமுனி உரைத்தான் எனற்பாலதனை, அசோகின்முனி உரைத்தான் என்றமையால், நியாய மலைவு ஆயிற்று. போதிமுனி - புத்தன், அசோகின்முனி - அருகன். பிறவு மன்ன. (வி - ரை) அறுவகைச் சமயங்கள் :- உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்பன. காண்டல் முதலிய அளவைகளாவன :- காட்சி, அனுமானம் உரை, உவமை, அருத்தாபத்தி, இன்மை என்பன. இவ்வளவைகளின் இலக்கணத்தைச் சிவஞான சித்தியாரால் நன்கறியலாம். (32)
|