3. மூவடி முதன்மடக்கு (1) ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியும் முதன்மடக்கு எ - டு : | 'இறைவா இறைவால் வளைகாத் திருந்தியார் | | உறைவார் உறைவார் புயலால் - நறைவாய் | | வண்டளவு வண்டளவு நாளின்மயி லாலக் | | கண்டளவில் நீர்பொழியுங் கண்' |
இ - ள் : இறைவனே! இறைக்கண் வெள்ளிய வளைகள் வீழாதபடி காத்திருந்து யார் உயிரோடு வாழ்வார்? துவலை மிக்க புயலினாலே, தேனை யிடத்திலேயுடைய வளப்பத்தையுடைய முல்லை மலரின் மீதே வண்டுகள் இருக்கப்பட்ட கார்காலத்து மயிலாடக் கண்டு அளவில்லாத நீரைப்பொழியும் கண்கள் எ - று. ஆதலால், யார் உயிரோடு வாழ்வார் என இயையும். இதில் 'இறைவா இறைவா' என்று முதலடி முதலிலும், 'உறைவார் உறைவார்' என்று இரண்டாமடி முதலிலும், 'வண்டளவு வண்டளவு' என்று மூன்றாமடி முதலிலும் மடக்குகள் வந்தமை காண்க. (வி - ரை)இது தலைவனது பிரிவின்கண் தலைவியது ஆற்றாமை கூறித்தோழி செலவழுங்குவித்ததாகும். இறைவா - இறைவனே; தலைவனே! இறை - முன்கை. வால் - வெண்மையான. உறைவார் - தங்குவார் (உயிரோடு வாழ்வார்). உறை - நீர்த்துளி. வார் - மிக்க. வண்தளவு - வளப்பம் பொருந்திய முல்லை. வண்டு அளவு - வண்டுகள் இருக்கப்பட்ட. (2) முதலயலடி யொழித்து ஏனை மூன்றடியும் முதன்மடக்கு எ - டு : | 'கொடியார் கொடியார் மதில்மூன்றுங் கொன்ற | | படியார் பனைத்தடக்கை நால்வாய்க் - கடியார் | | உரியார் உரியார் எமையாள வோதற் | | கரியார் கரியார் களம்' |
இ - ள் : கொடியராய் உள்ளாருடைய கொடிகள் பொருந்திய முப்புரத்தையும் எரித்த தன்மையினை யுடையார், பனை போன்ற பெரிய கையினையுடைய யானையின் அச்சத்தைத்தரும் தோலையுடையார், எம்மை ஆண்டுகோடற்கு உரியார், யாவராலும் புகழ்தற்கு அரியார், கறுத்த மிடற்றினை யுடையார் எ - று. மதில் - முப்புரம். இதில் 'கொடியார் கொடியார்' என்று முதலடி முதலிலும், 'உரியார் உரியார்' என்று மூன்றாமடி முதலிலும், 'கரியார்கரியார்' என்று நான்காமடி முதலிலும் மடக்குகள் அமைந்திருத்தல் காண்க. (வி - ரை) இது சிவபெருமானின் இயல்பினை விவரிப்பதாகும். கொடியார் - கொடியராயுள்ளார். கொடிஆர் - கொடிகள் பொருந்திய. உரியார் - யானைத் தோலையுடையார். உரியார் - எம்மை ஆண்டு கோடற்கு உரியார். ஓதற்கு அரியார் - புகழ்தற்கு அரியார். கரியார் - கறுத்தமிடற்றினையுடையார்.
|