இ - ள் : களவொழுக்கு ஆகாது எனக்கொண்டு வரைய வேண்டும் என்னும் ஆசையால் பிரிந்து மலைகளையுடைய சுரங்கடந்து போயினார், 'நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்' என்று முற்காலத்து நம்மைத் தேற்றிய வார்த்தைகள் இப்பொழுது நமக்குப் பெரிதாகிய குற்றத்தைப் பயந்தனவென்று, பொன்னை யொப்பாய்! சொல்லற்பாலை யல்லை; மதுவோடும், குளிர்ச்சியோடும் கூடிய தொடையலை நமக்கு விரைந்து வந்து சூட்டுவர்; என்னை யெனில், அவர் பல செய்தியும் அறிவினையும் உடையராதலால் எ - று. இதில் 'வரைய வரைய' என்று முதலடி முதலிலும், 'புரைய புரைய' என இரண்டாமடி முதலிலும், 'நனைய நனைய' என மூன்றாமடி முதலிலும், 'வினையர் வினையர்' என நான்காமடி முதலிலும் மடக்குகள் வந்தமை காண்க. இவை பதினைந்தும் அடிமுதன் மடக்கு. (வி - ரை)இது பிரிவிடை ஆற்றாளாய தலைவியைத் தோழி ஆற்றுவித்ததாம். வரைய - வரையவேண்டும் என்ற ஆசையால். வரைய - மலைகளையுடைய. புரைய - பெரிதாகிய. புரைய - குற்றம். நனைய - தேன். நனைய - குளிர்ச்சி. வினையர் - பல செயல்களையும் உடையவர். வினையர் - அறிவினையுடையவர். இடை முற்றுமடக்கு எ - டு : | 'மனமேங் குழைய குழையவாய் மாந்தர் | | இனநீங் கரிய கரிய - புனைவதனத் | | துள்வாவி வாவிக் கயலொக்கும் என்னுள்ளம் | | கள்வாள வாளவாங் கண்' |
இ - ள் : மனந்தளர்ந்த மானின் நோக்கத்தை யுடையனவுமாய்க், குழையைத் தொடர்வனவுமாய்த், 1தோழியர் குழாம் விட்டு நீங்குதற்கு அரியனவுமாய்க், கருமையையும் உடையனவாய் இருப்பன, அலங்கரிக்கப்பட்ட முகத்தில் உலாவிப் பொய்கைக் கயல் போலும்; என் உள்ளத்தைக் களவு கொண்டவளுடைய அவ்வாளொத்த கண்கள் எ - று. இதில் முதலடியின் இடையில் 'குழைய குழைய' எனவும், இரண்டாமடியின் இடையில் 'கரிய கரிய' எனவும், மூன்றாமடியின் இடையில் 'வாவி வாவி' எனவும், நான்காமடியின் இடையில் 'வாள வாள' எனவும் மடக்குகள் வந்தமை காண்க. ஒழிந்த இடை மடக்கு வந்தவழிக் கண்டு கொள்க. (வி - ரை)இது, பொழிலிடத்துத் தலைவியைக் கண்ட தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியதாம். முதல் வரியில் மனம் ஏங்கு உழைய, குழைய எனவும், இரண்டாம் வரியில் இனம் நீங்கு அரிய கரிய எனவும் பிரிக்க. வாவி - உலாவி. வாவிக்கயல் - பொய்கையில் உள்ள மீன். கள்வாள் - களவுகொண்டவளுடைய. அ வாள் அவாம் கண் - அவ்வாளை யொத்த கண்கள். ஒழிந்த இடைமடக்காவன : - ஓரடி இடை மடக்கு நான்கும், ஈரடி இடைமடக்கு ஆறும், மூவடி இடைமடக்கு நான்கும் ஆம்.
1. 'இளைஞர் குழாம்' என்பதும் பாடம்.
|