சுரம் - இத்தன்மையை யுடைய வழிகள், கனல் மானம் ஆன - நெருப்பின் அளவாயுள்ளன எ- று. தீமை - தீம் என ஈற்றுயிர் கெட்டது. கல்ல - கல் என ஈறு குறைந்தது. இதில் 'மான மான' என்ற சொல் நான்கடிகளின் இடையிலும் ஈற்றிலும், இடையிட்டும் இடையிடாதும் மடங்கி வந்தமை காண்க. இன்னும் பலவிதமாக வரும் மடக்குகளின் வேறுபாடுகளையும் வந்துழிக் கண்டு கொள்க. அவற்றுள் சில காட்டப்படுகின்றன. அடிதொறும் தனித்தனியே வந்த இறுதி முற்றுமடக்கு எ - டு : | 'வருமறை பலமுறை வசையறப் பணிந்தே | | மதியொடு சடைமுடி மருவுமப் பணிந்தே | | அருநட நவில்வது மழகுபெற் றமன்றே | | அருளொடு கடவுவ தணிகொள்பெற் றமன்றே | | திருவடி மலரன திகழொளிச் சிலம்பே | | தெளிவுட னுறைவது திருமறைச் சிலம்பே | | இருவினை களைபவ ரடைபதத் தனன்றே | | இமையவர் புகலிறை யெனநினைத் தனன்றே' |
இ - ள் : பழமையாக வருகின்ற வேதங்கள் பலகாலும் தம் குற்றமறத் தொழுது போற்றச் சடையையுடைய முடியில் பிறையோடு சேரப்பட்ட கங்கையைத் தரித்து, அரிய நடமாடுவதும் அழகுடைய திருவம்பலத்தே; கருணையொடு ஏறிச் செலுத்துவது அலங்காரத்தை யுடைய விடையே; திருவடித் தாமரையிற் சேர்ந்து கிடப்பன விளங்குகின்ற ஒளியையுடைய சிலம்பே; விளக்கத்துடனே எழுந்தருளி யிருப்பது அழகிய வேதரூபமான கைலை மலையே; இருவினையும் கடிந்தார் அடையும் பாதத்தன்; அநாதி காலந்தொட்டே தேவர்க்குப் புகலாகிய முதல்வன் என்று தியானித்தல் நன்மை பயப்பதாகும் எ - று. இதில் 'பணிந்தே' என்ற சொல் முதலடியின் இடையிலும் ஈற்றிலும், 'பெற்றமன்றே' என்ற சொல் இரண்டாமடியின் இடையிலும் ஈற்றிலும், 'சிலம்பே' என்ற சொல் மூன்றாமடியின் இடையிலும் ஈற்றிலும், ' தனன்றே' என்ற சொல் நான்காமடியின் இடையிலும் ஈற்றிலும் மடங்கி வந்தமை காண்க. (வி - ரை)தில்லைப் பெருமானை வணங்குதலே அழகு என்பதை இப்பாடல் விளக்குகின்றது. வசையறப் பணிந்து - குற்றமறத் தொழுது. அப்பு அணிந்து - கங்கையைத் தரித்து. அழகுபெற்ற மன்றே - அழகுடைய திருவம்பலம். பெற்றம் அன்றே - விடையே; அன்றே - தேற்றப்பொருள் படுவதோர் இடைச்சொல். ஒளிச்சிலம்பு - ஒளியையுடைய சிலம்பு. மறைச் சிலம்பு - வேதவடிவான கைலைமலை. அடைபதத்தன் - (இருவினை கடிந்தார்) அடையும் பாதத்தன் (திருவடிகளை யுடையவன்). அன்றே - அநாதியே. நினைத்தல் நன்று - தியானித்தல் நன்மை பயப்பதாகும்.
|