இப்பாடற்கண் அடிதொறும் இறுதிக்கண் ஒவ்வொரு சொல்(பணிந்தே, பெற்றமன்றே, சிலம்பே, தனன்றே) மடங்கி வந்துள்ளமையின், இது அடிதொறும் தனித்தனியே வந்து இறுதி முற்று மடக்காயிற்று. | 'உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே | | கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே | | அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே | | பெற்றும் உகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே' |
என்ற திருஞான சம்பந்தர் தேவாரமும், 'அரங்கம் ஐயற்கு வெள்ளியரங்கமே' என்றல் தொடக்கத்ததான குமரகுருபரரின் திருவாக்கும் இவ்வகையில் அடங்குவனவாகும். அடிதொறும் முதற்சீர் ஒழித்து வந்த முற்றுமடக்கு எ - டு : | 'அனைய காவலர் காவலர் காவலர் | | இனைய மாலைய மாலைய மாலைய | | எனைய வாவிய வாவிய வாவிய | | வினைய மாதர மாதர மாதரம்' |
இ - ள் : அனைய - அத்தன்மையாகிய, கா அலர் - சோலையின் மலராகிய காமன் கணைகளை, காவலர் - நம் தலைவர், காவலர் - காத்தல் இலர், இனைய - (ஆகவே) இத்தன்மைத்தாகிய, மாலைய - மயக்கத்தைத் தருகிற, மாலைய - மாலைப்பொழுது, மாலைய - அத்தன்மையது, எனை - என்னை, அவாவிய - நீங்காது காதலித்த, ஆவிய - உயிர் போன்ற, ஆவிய - அறிவையுடைய, வினைய மாது - வினை செய்தலிற் சிறந்த தோழி, அரம் - அரத்தினை யொத்தாள், ஆதரம் - ஆசையானது, மாதரம் - மிகுதியாம் எ- று. இதில் முதலடியின் இடையில் 'காவலர்' என்ற சொல் மும்முறையும், இரண்டாமடியில் 'மாலைய' என்ற சொல் மும்முறையும், மூன்றாமடியில் 'வாவிய' என்ற சொல் மும்முறையும், நான்காமடியில் 'மாதர' என்ற சொல் மும்முறையும் மடங்கி வந்தமை காண்க. (வி - ரை) இது தலைவி வன்புறை எதிரழிந்து கூறியதாகும். பிரிவிடை ஆற்றாது வருந்தும் தலைவியைத் தோழி ஆற்றியிருக்கவேண்டும் என வற்புறுத்திக் கூறுவதால், அவ்வுரை தலைவிக்கு அரம் போன்றதாயிற்று. இப்பாடற்கண் அடிதொறும் முதற்சீர் ஒழித்து, ஏனையசீர்கள் மடங்கி வந்தமை காண்க. (4) சொல் மடக்கு முற்றும். அடி மடக்கு 95. அடிமுழுதும் மடக்கலும் ஆங்கதன் சிறப்பே. எ - ன், ஈண்டு அம்மடக்கு என்னும் அலங்காரத்தையே வேறுபடுத்துக் கூறுகின்றது. இ - ள் : அடிகள் முழுதும் மடக்கி வருதலும், அம்மடக்கிற்குச் சிறப்புடைத்து எ- று.
|