பக்கம் எண் :
 
சொல்லணியியல்193

அவை: ஈரடி மடக்கும், மூவடி மடக்கும், நான்கடி மடக்கும் என மூன்று வகைப்படும்.

ஈரடி மடக்கு வருமாறு :-

(1) முதல் ஈரடியும் மடக்கு

எ - டு :

'விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
வரைமேவு நெறியூடு தனிவாரல் மலைநாட!
நிரைமேவு வளைசோர இவளாவி நிலைசோரும்'

 இ - ள் : விரை மேவு மதமாய - கமழும் கடமுடைய, விடர் கூடு - துன்பமுறும், கடுநாக இரை - கடிய யானைகளை இரையாகக் கொள்ள, மேவு - விரும்பும், மதமாய - வலிய முழையுள், கூடு கடு நாகம் - உறையும் நஞ்சையுடைய பாந்தளையுடைய, வரை மேவு - மலை பொருந்திய, நெறியூடு - வழியினூடு, தனி வாரல் - தனிமையாய் வாராதொழியாக, மலை நாட - குறிஞ்சி நிலத்தலைவனே! (அங்ஙனமின்றி வருவையாயின்), நிரை மேவு - வரிசை பொருந்திய, வளைசோர - வளை சரிய, இவள் ஆவி நிலை சோரும் - இவள் ஆவியும் நிலையினின்று நீங்கும் எ - று.

இதில் 'விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக' என்ற சொற்றொடர் முதல் இரண்டடி முழுவதிலும் மடங்கி வந்தமை யுணர்க.

(வி - ரை)இது, ஆற்றது தீமை கண்டு தோழி தலைமகற்கு உரைத்ததாகும்.

(2) முதலடியும் மூன்றாமடியும் மடக்கு

எ - டு :

'கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்கள்
உடன்மேவு நிறைசோர மெலிவாட னுயிர்நோவு
கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்கள்
உடன்மேவு பெடைகூடு மறுகாலு முரையாகொல்'

இ - ள் : கடன் மேவு - முறையாகப் புணரும், கழி காதல் மிக - மிக்க காதல் வளர, நாளும் மகிழ்வார்கள் உடன் - நாட்கள்தோறும் மகிழ்வார்களுடனே கூடிக்கொண்டு, மேவும் நிறை சோர - பொருந்திய ஒழுக்கம் குன்ற, மெலிவாள் தன் உயிர் நோவு - வருந்துவாளது உயிர் வருத்தத்தை, கடல் மேவு - கடலிற் பொருந்திய, கழி காதல் மிக நாளும் - கழிக்கண் காதல் மிக்க காலைதோறும், மகிழ்வார் - களிப்பு மிக்க, கள் உடன் மேவு - மலர்க்கள்ளை விரும்பும், பெடை கூடும் அறுகாலும் - பெடையோடு கூடிய வண்டுகளும், உரையா கொல் - தலைவற்குச் சொல்லா போலும் எ - று.

இச்செய்யுளில் 'கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்கள்' என்ற சொற்றொடர் முதலடியிலும், மூன்றாமடியிலும், முழுதும் மடங்கி வந்தமை யுணர்க.

(வி - ரை)இது பிரிவிடை ஆற்றாளாய தலைவியது நிலையைத் தோழி, தலைமகற்குச் சிறைப்புறமாகக் கூறியது.