பக்கம் எண் :
 
202தண்டியலங்காரம்

இ - ள் :மேல் 'எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும், பெயர்த்தும்வேறு பொருள்தரின் மடக்கெனும் பெயர்த்தே' (91) என்றாராயினும், ஓரெழுத்தே பெயர்த்து மடக்குதலும் அம்மடக்கணி என்பர் எ - று.

எ - டு :

'நாநா நாதங் கூடிசை நாடுந் தொழிலோவா
தாதா தார மாகவி ரைத்தண் மலர்மீதே
வாவா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டே
யாயா யாளிற் சேர்த்துவ தன்பற் கிசையாயால்'

 இ - ள் :நாநா நாதம்கூடு இசை - நாநாவிதமான ஓசையோடு கூடும் இசைகளை, நாடும் - ஆராயும், தொழில்ஓவா - தொழில் நீங்காது, தாது ஆதாரமாக - தாதுக்களே (மகரந்தப் பொடி) ஆதாரமாக, விரை தண்மலர் மீதே - வாசனையையுடைய குளிர்ந்த மலர் மீதே, வாவா - தாவி, வார்தண் சோலையில் - நீண்டுள்ள குளிர்ந்த சோலையின் மீது, வாழும் வரி வண்டே - வாழும் புள்ளிகளையுடைய வண்டே!, யாய் ஆயாள் - என் அன்னையாய் உள்ளாள், இல் சேர்த்துவது - இற்செறித்தலை, அன்பற்கு இசையா யால் - தலைவற்குச் சொல்லுவாயாக எ - று.

இதில் 'நாநாநா' என முதலடியிலும், 'தாதாதா' என இரண்டாமடியிலும், 'வாவாவா' என மூன்றாமடியிலும், 'யாயாயா' என நான்காமடியிலும் ஒவ்வோர் எழுத்தே மடங்கினமை காண்க.

(வி - ரை)வாவுதல் - தாவுதல். வாவா - செய்யாய் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது வண்டை முன்னிலைப் படுத்தித் தலைவி கூறுவது.

'மடக்கலும்' என்ற உம்மையால், ஓரெழுத்தும், ஈரெழுத்தும், மூன்றெழுத்தும், நான்கெழுத்தும், இனவெழுத்தும், மெய்யெழுத்தும், உயிரெழுத்தும் மடங்கும். உயிரும் மெய்யும் மடங்குங்கால் உயிர்மெய்யாய் வரும். இவையெல்லாம் ஒரு செய்யுள் முழுதும் மடங்கலும், ஓரடி முழுதும் மடங்கலும் உரியவெனக் கொள்க. அவற்றுள், சில வருமாறு:-

ஓர்உயிர் மடக்கு

(1) குற்றுயிரான் வந்த மடக்கு

எ - டு :

'அமல லகல மகல லபய
கமல பவன மவள
வமல மடர வளக
வதன மடர மதன'

 இ - ள் :அமலல் - சேராதொழிவாயாக!, அகலம் - எங்கள் மார்பினை, அகல் - நீங்கிப்போ, அல் - இரவின்கண், அபய - அபயனே!, கமல பவனமவள் அ - தாமரையை யிடமாகவுடைய தேவியை யனைய இவளுடைய, அமலம் - குற்றமற்ற, அடர அளக வதனம் - செறிந்திருக்கப்பட்ட குழலினையுடைய முகத்தை, அடரல் - அழிவு செய்யாதொழிவாயாக!, மதன - காமனை யொத்தாய் எ - று.