பக்கம் எண் :
 
சொல்லணியியல்203

அமல் - சேருதல். அல் - ஒழிதல். 'அடரல்' என்பது 'அடர' எனக் கடை குறைந்து நின்றது. இதில் எல்லா இடத்தும் அகரக் குற்றுயிரே வந்தமை காண்க.

(வி - ரை)இதன்கண் அகரமாகிய குற்றுயிர் முழுதும் மடங்கி வருதலின், இது குற்றுயிர் மடக்காயிற்று.

(2) நெட்டுயிரான் வந்த மடக்கு

எ - டு :

'தாயாயா ளாராயா டாமாறா தாராயா
யாமாரா வானாடா மாதாமா தாவாவா
யாவாகா லாறாகா வாகாகா ணாநாமா
மாலாறா மாநாதா வா'

 இ - ள் :தாயாயாள் - தாயாயுள்ளவள், ஆராயாள் - இவளது விதனத்தை அறியாள் ஆதலால், தா மாறாது - வருத்தம் மாறாது, ஆராயாய் - இதனை யாராயாய்; ஆராயா - அங்ஙனம் ஆராயாத நினக்கு, யாம் ஆர் - அறிவுணர்த்த யாங்கள் ஆராக, வான் நாடா - வான நாட்டை யொத்த நாட்டையுடையவனே! மாதா - மாதானவள், மா தா - பெரிய வருத்தம் உறுவள், வா - வருவாயாக!; வாயா ஆகா - வந்தால் வாயாதது எது?, கால் ஆறாவா - வரும் பொழுதும் காலாறி வருவாயாக; கா - எங்களையும் காப்பாயுமாக; ஆகா காண் - இவை யாகாதன காண்; நா நாம் ஆம் - அயலவர் நாவால் எங்களுக்கு அச்சம் உண்டாகா நின்றது; மால் ஆறா - மயக்கமும் மாறாது; மா நாதா வா - பெருமையை யுடைய தலைவனே! வருவாயாக எ - று.

இதில் எல்லா இடத்தும் ஆகார நெட்டுயிரே வந்தமை உணர்க.

(வி - ரை)இப்பாடலில் முதல் அடியில் உள்ள 'ஆராயாய்' என்பதும், இரண்டாம் அடியில் உள்ள 'வா' என்பதும் இருமுறை இயைத்துப் பொருள் கொள்ளப்பட்டன. தா - வருத்தம். நாம் - அச்சம்.

ஒருமெய் மடக்கு

(1) ககர விகற்பத்தான் வந்த மடக்கு

எ - டு :

'காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா'

 இ - ள் :காக்கைக்கு ஆகா கூகை - காக்கைக் குலங்கட்கு ஆற்றா கூகைக்குலம்; கூகைக்கு ஆகா காக்கை - கூகைக் குலங்கட்கு ஆற்றா காக்கைக்குலம்; ( காலவசத்தானாதலால்) கோக்கு - அரசர்க்கு, கூ காக்கைக்கு - பூமியைக் காத்தற்கும், கொக்கு ஒக்க கைக்கைக்கு - கொக்கினை யொத்துப் பகையை அழித்தற்கும் (கால வாய்ப்பு வேண்டும்; அக்கால வாய்ப்பு இன்றேல்), காக்கைக்கும் - இந்திரற்கும், கைக்கைக்கு ஆகா - பகை அழித்தற்குக் கூடாது எ- று.

காலம், பகை என்னும் சொற்கள் எஞ்சிநின்றன. இது ககர விகற்பத்தான் வந்தது.

(வி - ரை)காலவசத்தானாதல் முதலிய தொடர்கள் இசையெச்சமாய் நின்றன.