பக்கம் எண் :
 
204தண்டியலங்காரம்

'பகல்வெல்லும் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது'

(481)

'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்கச் சீர்த்த இடத்து'

(490)

என்னும் குறட்பாக்கள் ஈண்டு நினைவு கூரத்தக்கன. கூ - பூமி. காக்கு - கற்பகச் சோலைக்கு. ஐக்கு - தலைவனுக்கு. இஃது இப்பொருட்டாதல் 'என்னைமுன் நில்லன்மின்' (குறள் - 771) என்றவிடத்தும் காண்க. இதன்கண் ககர இனமே அமைந்திருத்தல் காண்க.

(2) தகர விகற்பத்தான் வந்த மடக்கு

எ - டு :

'தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது'

இ - ள் : தத்தி - பாய்ந்து, தாது ஊதுதி - தாதுக்களையுடைய பூக்களின் மதுவை உண்ணா நிற்றி; தாது ஊதி தத்துதி - அங்ஙனம் உண்டு மீண்டும் வேறொரு பூவில் பாயா நிற்றி; துத்தி - அங்ஙனம் உண்டு பாய்ந்து, துதைதி - செறியாநிற்றி; துதைத்த தாது ஊதுதி - (மீண்டும்) வேறொரு செறிந்த பூவின் தாதுக்களைக் கோதாநிற்றி; தித்தித்த தித்தித்த தாது எது? - (இப்பூக்களில்) தித்தித்து இன்பந்தரும் பூ எது?; தித்தித்த தித்தித்த தாது எத்தாதோ? - தித்தித்து இன்பந்தரும் தாது எந்தப்பூவின் தாது? (எமக்குச் சொல்லுவாயாக) எ - று.

இதில் 'வண்டு' என்னும் சொல் எஞ்சி நின்றது. தலைவி அவயவங்களை வியந்த தலைவன், தலைவி கேட்ப வண்டினை நோக்கிக் கூறியது. இது தகர விகற்பத்தான் வந்தது.

ஈரெழுத்தான் வந்த மடக்கு

எ - டு :

'மன்னுமான் மான்முன்ன மானமு மீனமா
மின்னமா னேமுன்னு மானினி - மென்மென
மின்னுமா மென்னினா மன்னமுமா மென்மனனே
மன்னுமா மானுமான் மான்'

இ - ள் : மன்னுமால் மால் - உண்டாகா நின்றது மயக்கம்; முன்னம் மானமும் ஈனமாம் - முன்னுறவே மானமும் குறையா நின்றது; இன்னம் ஆனேம் - இத்தன்மையான எம்மால், முன்னும் - நினையப்படும், மான் இனி - மாது இனி, மென்மென - மெல்லென, மின்னும் ஆம் என்னில் நாம் - நாம் மின்னலையும் ஒப்பாள் என்பேமாயின், அன்னமும் ஆம் - அன்னமுமாம் எனலாய் நிற்பள்; என் மனனே மன்னும் - என் உள்ளத்துள்ளே தங்குவதும் செய்யா நிற்பள்; மா மான் மானுமால் - மாமை நிறத்தையுடைய மானை யொக்கும் கண்ணினையுடைய அம்மாது எ - று.

இதில் மகரமும் னகரமும் ஆகிய ஈரெழுத்துக்களே வருதல் காண்க.